கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்த இரு முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அவர்கள் இருந்த அறைகளின் அருகில் இருந்த மாணவர்கள், உணவகத்தில் இருந்த பணியாளர்கள் என அனைவரும் பரிசோதிக்கப்பட்டனர்.
பின்னர் கரோனா பாதித்த முதுகலை மருத்துவ மாணவர்கள் பயன்படுத்திய கல்லூரி உணவகத்தினை மூட கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது. இது தொடர்பாக கல்லூரி விடுதியில் தங்கியிருக்கும் மருத்துவர்களுக்கும், மருத்துவ மாணவர்களுக்கும், கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையர் ( டீன்) அசோகனுக்கு முதுகலை மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில், கோவிட்-19 பாதிப்பு காரணமாக உணவு மற்றும் குடிநீர் தேவைகள் துண்டிக்க கல்லூரி நிர்வாகம் முடிவு செய்திருப்பதைத் திரும்பப் பெற வேண்டும் எனவும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை எனில் மருத்துவ மாணவர்களின் வழக்கமான பணிகள் மேற்கொள்வதில் பாதிப்பு ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.
![பீலா ராஜேஷ் உறுதி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cbe-05-medical-hostel-issue-7208104_14042020034003_1404f_1586815803_67.jpg)
உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்க தேவையான மாற்று ஏற்பாடுகளை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் மனுவில் வலியுறுத்தி இருந்தனர். மேலும் நோய்த் தொற்று ஏற்பட்ட மருத்துவ மாணவர்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தொற்று ஏற்பட்ட மருத்துவ மாணவர்கள் சிகிச்சை பெற போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை எனவும் முதுகலை மாணவர்கள் தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பான கோரிக்கைகளை சமூகவலைதளங்களிலும் முதுகலை மருத்துவ மாணவர்கள் பதிவிட, அதனைப் பல்வேறு தரப்பினரும் பகிர்ந்திருந்தனர். இதன் மூலமாக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படவே, இதை கோவை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு் சென்று இருப்பதாகவும், பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும் எனவும் சமூக வலைதளங்களில் அவர் தெளிவுபடுத்தி்யுள்ளார்.