கோவை: ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை சம்பவத்தில் கொள்ளையடிக்கப்பட்ட 3 கிலோ தங்கம், வைரம், பிளாட்டினம் உள்ளிட்ட நகைகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் நகைகள் திருட்டுப் போன சம்பவம் குறித்து தற்பொழுது வரை காவல்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றி கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று (நவ.30) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், 'இந்த வழக்கில் உடனடியாக வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை கண்டுபிடித்து, களவு சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது. அறிவியல் ரீதியான தடவியல் நிபுணர்கள் உதவியுடன் புலன் விசாரணை மேற்கொண்டதில், இதனை செய்தவர் தருமபுரியை சேர்ந்த விஜய் என்பது தெரியவந்தது.
விஜய் இன்னும் கைது செய்யப்படவில்லை. கூடிய விரைவில் அவர் கைது செய்யப்படுவார். இந்த வழக்கில் தொடர்ந்து புலன் விசாரணை நடைபெறும். வேறு யாருக்கேனும் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த திருட்டில் விஜய்யின் மனைவி நர்மதா உடந்தையாக இருந்துள்ளார். இருவரும் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளையடிக்க திட்டமிடவும், நகைகளை மறைத்து வைக்கவும், தப்பிச் செல்லவும் நர்மதாவின் பங்களிப்பு இருந்துள்ளது. அங்கு அலாரம் கருவி செயல்படவில்லை, பழுதாகி இருந்துள்ளது.
முதற்கட்ட தகவலின் அடிப்படையில் 2 கிலோ தங்க நகைகள், வைரம், பிளாட்டினம், வெள்ளி ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பான, புலன் விசாரணையில் 4 கிலோ 600 கிராம் தங்க நகைகள், வைரம், பிளாட்டினம், 700 கிராம் வெள்ளி ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. தற்போது 3 கிலோ தங்கம், வைரம், பிளாட்டினம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விஜய் மீது அரூர், ஆர்.எஸ். புரம் உள்ளிட்ட பகுதிகளில் பணம் திருடியது உள்ளிட்ட சில திருட்டு வழக்குகள் உள்ளன. கட்டுமானப் பணிகள் நடைபெறும் போது, சரியாக எப்படி உள்ளே நுழைந்தது மூன்றாவது மாடிக்கு எப்படி சென்றார் என்பது குறித்தும், கடையில் பணியாற்றுபவர்கள் தகவல் அளித்தார்களா? என்பது குறித்தும் அவரை கைது செய்து விசாரணை நடத்தினால் தெரியவரும்.
ஆனைமலை பகுதியை சேர்ந்த விஜய்யின் நண்பர் சுரேஷ் என்பவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விஜய் இதற்கு முன்பு சிறிய அளவிலான பணம் திருட்டில் ஈடுபட்டுள்ளார். நகைக்கடைக்குள் சென்றதும் அவர் முதலில் பணம் இருக்கிறதா? என சோதனை செய்துள்ளார். பணம் கிடைக்காததால், டொனேசன் பணத்தையும் நகையையும் எடுத்துள்ளார். நகைகளை அவர் தேர்வு செய்து எடுக்கவில்லை. ரேண்டம் ஆக எடுத்துள்ளார். கூடிய விரைவில் விஜய் கைது செய்யப்படுவார்' எனத் தெரிவித்தார்.
கடந்த நவ.27ஆம் தேதி நகைக்கடையின் சுவற்றில் பொருத்தப்பட்டிருந்த ஏசி வென்டிலேட்டரைக் கழற்றி, அதன் வழியே கடைக்குள் புகுந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தத்தளிக்கும் தலைநகரம்..மழைநீரில் மூழ்கும் வயல்வெளிகளை காப்பாற்ற என்ன வழி? அரசுக்கு ஆர்.பி.உதயகுமார் கேள்வி