”அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்றார் பாரதி. அவரின் கூற்றை தொழிலதிபர் ஒருவர் மெய்ப்பித்திருக்கிறார்.
கோடி கோடியாய் சம்பாதிக்க புறம்போக்கு நிலங்களை வளைத்துப் போடும் தொழிலதிபர்களுக்கு மத்தியில் இவர் கொஞ்சம் வித்தியாசமானவர். ஆம் தனக்குச் சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தை ஏழைக் குழந்தைகளின் கல்வி நலனுக்காகத் தானம் அளித்து தொழிலதிபர் ராமமூர்த்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார். கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பேரூராட்சியிலுள்ள எலச்சிபாளையம் கிராமமே ராமமூர்த்தியின் சொந்த ஊர். தற்போது கோவையில் வசித்துவருகிறார்.
கருமத்தப்பட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் உயர் கல்வி பெறுவதில் நீண்ட காலமாகச் சிக்கல் நிலவிவருகிறது. இப்பகுதிகளில் எலச்சிப்பாளையத்தில் மட்டுமே நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது. அதைத் தவிர்த்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் எந்த உயர்நிலைப் பள்ளிகளும் இல்லை. இதனால் மாணவர்கள் பேருந்து பயணம் செய்து அரசூர், அவிநாசி ஆகிய ஊர்களுக்குச் சென்று உயர் கல்வியைத் தொடர வேண்டிய நிலை தொடர்கிறது.
இதனால் மாணவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாவதாகக் கூறும் கிராமவாசி பிரபாகரன், “கருமத்தம்பட்டி பேரூராட்சியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்துவருகின்றனர். இப்பகுதிகளிலுள்ள மாணவர்கள் கல்வி பயில உயர்நிலைப் பள்ளி இல்லை. ஆகையால் எலச்சிபாளையத்தில் ஒரு உயர்நிலைப் பள்ளி கட்ட வேண்டும் என நீண்ட நாள்களாக நாங்கள் கோரிக்கை விடுத்து வந்தோம். அதற்கான முயற்சிகளையும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தோம்.

இப்பிரச்னையை தொழிலதிபர் ராமமூர்த்தியிடம் தெரிவித்தோம். அவர் சற்றும் யோசிக்காமல் தற்போது உள்ள நடுநிலைப் பள்ளிக்கு அருகே அமைந்திருக்கும் தன்னுடைய ஒன்றரை ஏக்கர் பரப்பளவிலான நிலத்தைத் தானமாக வழங்குவதாகக் கூறினார். அவர் கூறியதைக் கேட்டு நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தோம்.
வெறும் வாய் வார்த்தையோடு மட்டும் நின்றுவிடாமல் முறைப்படி என்ன செய்ய வேண்டுமோ அதையும் செய்துமுடித்து விட்டார். அதன்படி நிலத்தை இலவசமாக அரசுக்குத் தானம் அளித்துள்ளார். இதன்பின் அரசுதான் உயர்நிலைப் பள்ளி கட்ட வேண்டும். அரசு விரைவில் பள்ளி கட்டிக் கொடுத்தால் நாங்களும் எங்களது குழந்தைகளும் மகிழ்ச்சியாக இருப்போம்” என்றார்.
எலச்சிப்பாளையத்தில் உயர்நிலைப் பள்ளி அமைந்துவிட்டால் பெண் பிள்ளைகள் பாதுகாப்பாக உணர்வார்கள் என்கிறார் ஜோதி. ஏனென்றால் தொலைவில் உள்ள இடங்களுக்கு அவர்கள் கல்வி பயில செல்வதால் வீடு திரும்பும் வரை அச்சத்துடனே இருப்பதை ஜோதி காரணமாகக் கூறுகிறார்.
மற்றுமொரு பிரச்னை நீண்ட காலமாக நிலவுவதாக சதிஷ் விவரிக்கிறார். “தற்போது ராமமூர்த்தி வழங்கிய இடத்தில் உடனடியாக உயர்நிலைப் பள்ளி கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் எலச்சிப்பாளையம் நடுநிலைப் பள்ளிக்கு வருவதற்கான சாலை மிகவும் குறுகியதாக உள்ளது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலாலும் மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். ஆகவே பள்ளி கட்டுவதோடு மட்டுமல்லாமல் சாலையை விரிவுபடுத்தினால் அனைவரும் பயன்பெறுவர்” என்றார்.
இவர்களை தொடர்ந்து நிலத்தைத் தானமாக வழங்க வேண்டும் என்ற எண்ணம் தனக்கு எங்கிருந்து வந்தது என்பது குறித்து நம்மிடையே பகிர்ந்து கொண்டார் தொழிலதிபர் ராமமூர்த்தி. ”எலச்சிப்பாளையம் கிராம மக்கள் விவசாயம் மற்றும் விசைத்தறி தொழில்களைப் பிரதானமாகக் கொண்டுள்ளனர். இங்கு ஏழை குழந்தைகள் படிப்பதற்காக 1957ஆம் ஆண்டிலே என்னுடைய தந்தை பள்ளிக்காக நிலத்தைத் தானமாகக் கொடுத்து பள்ளியையும் கட்டிக் கொடுத்தார்.
அப்போது இருந்தே மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் எனக்குள் இருந்துவந்தது. அப்போது தான் எலச்சிப்பாளையம் ஊர் மக்கள் என்னிடம் வந்து முறையிட்டார்கள். பின்னர் மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில்கொண்டு பள்ளி கட்டுவதற்காக நான் என்னுடைய நிலத்தை அளிக்க முடிவுசெய்தேன்.
இதனால் அந்தப் பகுதியிலுள்ள ஏழை மாணவர்கள் எவ்வித சிரமமின்றி உயர் கல்வியைப் பெறுவார்கள் என்று நம்பிக்கை பிறந்திருக்கிறது. அதனால் என்னுடைய நிலத்தைத் தானம் செய்ததில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். நான் வழங்கிய இடத்தில் கட்டப்படும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வாழ்வில் முன்னேறினால் அதுதான் எனக்கும் எனது குடும்பத்துக்கும் பெருமை” என்றார்.
நிலம் வழங்கியதோடு மட்டுமல்லாமல் கட்டுமானப் பணிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறி ராமமூர்த்தி நெகிழ வைத்தார்.