கோவை புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ்(28). இவர் பெயிண்ட்டராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று (ஜூலை13) உக்கடம் பைப்பாஸ் சாலையில் மனோ ஹாஸ்பிடல் அருகே உள்ள கட்டடத்திற்கு பெயிண்ட் அடிக்க சென்றுள்ளார்.
அப்போது அந்தக் கட்டடத்தின் மேலாளர்கள் விவேக், மோகன் ஆகியோர் மின்கம்பத்தில் ஏறி கட்டடத்திற்கு பெயிண்ட் அடிக்க கூறியுள்ளனர். ஆனால் ஆண்ட்ரூஸ் மின்சாரம் தாக்கக் கூடும் என்று மறுத்துள்ளார். ஆனால் மீண்டும் மேலாளர்கள் மின்சாரம் அணைக்கப்பட்டுள்ளதாகவும் எனவே மின்கம்பத்தில் ஏறி கட்டடத்திற்கு பெயிண்ட் அடிக்குமாறும் வற்புறுத்தி உள்ளனர்.
இதனால் விருப்பம் இல்லாமல் மின்கம்பத்தின் மேலே ஏறி பெயிண்ட் அடிக்க முற்பட்டபோது மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டார். ஆபத்தான நிலையில் அவரை அப்பகுதி மக்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ராமநாதபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பின் காவல் துறையினர் மேலாளர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் மின்கம்பத்தில் மின்சாரம் அணைக்கப்பட்டாமலேயே மின்சாரத்தை அணைத்து விட்டதாக கூறி ஆண்ட்ரூஸை மின்கம்பத்தின் மீது ஏற வைத்தது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவர் மீதும் இந்திய தண்டனை சட்டம் 338 (மனித உயிருக்கு ஆபத்து விளைவித்தல்) கீழ் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: ராணுவ வீரரின் மனைவி, தாய் கொலை; நகைகள் கொள்ளை!