கோயம்புத்தூர்: காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனைத் தவிர்க்க பல்வேறு நாடுகள் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவுகளைச் செய்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் குறிப்பிட்ட காலத்தில் மழை பொழியாதது, மாசுபட்ட காற்று, என பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இதனைத் தடுக்க மரம் நடுவது மட்டுமே பிரதான தீர்வாக அமையும் என அறிஞர்களும் சூழலில் ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
மரங்களை ஒரு புறம் வெட்டி வந்தாலும் அதனைப் பாதுகாக்கப் பல இடங்களில் பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தங்கள் கிராமம் முழுவதும் மரங்கள் அதிகமாக வளர வேண்டும் என்பதற்காக ஆயிரக்கணக்கான வவ்வால்களை பாதுகாத்து தீபாவளி பண்டிகைக்குப் பட்டாசு வெடிக்காமல் அமைதியான முறையில் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர் கோவையிலுள்ள கிராம மக்கள்.
கோவை மாவட்டம் அமைந்துள்ளது கிட்டாம்பாளையம் கிராமம். இந்த கிராமத்தில் வசிக்கும் கிராம மக்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அவர்களின் கிராமத்தில் பட்டாசு இல்லாமல் தீபாவளி கொண்டாடி வருகின்றனர். இதற்குக் காரணம் என்னவென்று பார்த்தால், இந்தப்பகுதியில் பறவைகள் நிறைந்து சரணாலயம் போல் இருந்து வருகிறது. இந்தப்பறவைகளின் அமைதியைக் குலைக்க விரும்பாத கிராம மக்கள் தீபாவளி கொண்டாட்டத்தில் பட்டாசைப் புறக்கணித்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "எங்கள் கிராமம் செழிப்பாக இருக்க மரம் நடுவதே எங்களது குறிக்கோள். எங்களால் இயன்ற அளவு மட்டுமே மரங்கள் நடமுடியும். இதற்கு மாற்று வழியாகத்தான் எங்கள் ஊரில் பறவைகளைப் பெருக்க முடிவெடுத்தோம். அதன்படி, பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு வகையான பழங்களைச் சாப்பிட்டு வரும் வவ்வால்கள், பறவைகள் எங்கள் கிராமத்திற்கு வரும்போது, அதன் எச்சத்தில் உள்ள விதைகள் இங்கு மரங்களாக முளைக்கும்.
மேலும் தங்கள் கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கூட்டம் கூட்டமாக வவ்வால்கள் வந்த நிலையில், அதன் மூலம் நன்மைகளை உணர்ந்து இத்தகைய முடிவை எடுக்கப்பட்டது. இதுமட்டுமின்றி கிராம மக்கள் ஒன்றிணைந்து பல்வேறு பசுமை வனங்களையும் உருவாக்கியுள்ளோம்" எனத் தெரிவித்தனர்.
மேலும், விரைவில் கிட்டாம்பாளையம் மட்டுமல்லாமல் ஊராட்சி முழுவதும் அதிகப்படியான மரங்களை நடுவது அவர்களது குறிக்கோள் என அக்கிராம மக்கள் தெரிவித்தனர். வெடி வெடித்தால் மட்டுமே தீபாவளி பண்டிகையைக் கொண்டாட முடியும் என நினைக்கும் பெரும்பான்மையான சமூக மக்களின் வழக்கத்திற்கு மாறாக, இயற்கையையும், பறவைகளையும் காப்பாற்றப் பண்டிகை காலத்தில் வெடி வெடிக்காமல் அமைதியான முறையில் இயற்கையுடன் ஒன்றிணைந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர் கிட்டாம்பாளையம் கிராம மக்கள்.
இதையும் படிங்க:தீபாவளி உணவில் கட்டுப்பாடு வேண்டும்: மருத்துவரின் அறிவுறுத்தல் என்ன தெரியுமா?