கோயம்புத்தூர்: அன்னூர் பகுதியில் டிட்கோ(TIDCO) தொழில் பூங்கா அமைக்க மூவாயிரத்து 800 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயச் சங்கங்கள், அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போராட்ட குழுத் தலைவர் ரவிக்குமார், "அன்னூர், மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றும் தொழில் பூங்கா அமைக்க வெளியிடப்பட அரசாணையை அரசு திரும்ப பெற வேண்டும் என்றார்.
மேலும் குறிப்பிட்ட பகுதியில் பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட தனியார் நிறுவனம் ஆயிரத்து 200 ஏக்கர் நிலத்தை மட்டுமே விலைக்கு வாங்கி உள்ளதாகவும், ஆனால் 2 ஆயிரம் ஏக்கர் நிலம் வாங்கியிருப்பதாக ஆ.ராசாவிற்கு தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான இடம் விவசாய நிலங்களை சுற்றி இருப்பதாகவும், தொழிற்சாலைக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றார்.
தொழிற்பூங்கா அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள 3 ஆயிரத்து 800 ஏக்கர் நிலத்தில் 2 ஆயிரத்து 600 ஏக்கர் விவசாய பூமி என்றும் அதில் ஆயிரத்து 200 ஏக்கர் தனியார் நிறுவனத்திடம் இருப்பதாக தெரிவித்தார். முன்னதாக அன்னூர், மேட்டுப்பாளையம் பகுதியிலிருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்து நெரிசலைச் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: மக்கள் சலுகை பெற ஆதார் அவசியம் - தமிழ்நாடு அரசு