கோயம்புத்தூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக கோவை குற்றாலம் விளங்குகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உருவாகி வரும் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்வது வழக்கம். இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக கோவை குற்றாலத்துக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல கடந்த மார்ச் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டது. ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு சுற்றுலா தலங்களை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது.
அதன்படி, கோவை குற்றாலத்துக்கு செல்ல இன்று (டிசம்பர் 27) முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும் எனவும், அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வரவேண்டும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றி குற்றாலம் திறக்கப்பட உள்ளதாகவும், பயணிகள் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். இந்த அறிவிப்பால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை காரணமாக பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.