கோயம்புத்தூர்: மாவட்டத்தில் பத்து நாட்களுக்குப் பிறகு (ஜூலை 12) திங்கள்கிழமை முதல் தடுப்பூசி போடும் பணிகள் மீண்டும் துவங்கியது.
மாநகராட்சிக்கு உட்பட்ட 31 மையங்கள், ஊரகப்பகுதியில் உள்ள 30 மையங்கள், சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கையிருப்பில் 25 ஆயிரம் டோஸ் தடுப்பூசி மட்டுமே இருக்கும், நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பல்வேறு இடங்களில் பொதுமக்கள் (ஜூலை 11) இரவு முதலே நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.தடுப்பூசி செலுத்தப்படும் நாட்களில் மாநகரில் இதே நிலையே நீடிக்கிறது.
பீளமேடு
பீளமேடு மாநகராட்சி பள்ளி முன்பு நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் டோக்கன் கிடைக்காததால் ஆவேசமடைந்து தடுப்பூசி மையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். டோக்கன்களை அரசியல் கட்சியினர் வாங்கி செல்வதால் பொதுமக்களுக்கு டோக்கன் கிடைப்பதில்லை எனவும் குற்றஞ்சாட்டினர்.
நஞ்சுண்டாபுரம்
இரவு முழுவதும் வரிசையில் காத்திருந்த நிலையில், அதிகாலையில் லேசான சாரல் மழை பெய்தது. இதனையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தபடி மக்கள் ஆர்வமாக தடுப்பூசி போட்டுக் கொண்டனர். தற்போது மழைக்காலம் என்பதாலும், கோவையில் மதிய வேளைகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், தடுப்பூசி மையங்களில் காத்திருக்கும் மக்களுக்கு ஏதுவாக பந்தல்கள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏமாற்றம்
இங்கு மீண்டும் தடுப்பூசி போடுவதை அறிந்து (ஜூலை 11) இரவு 8 மணி முதலே 200க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவதற்கான டோக்கன்களை பெற பள்ளி வளாகத்தில் கூடினர். கடும் குளிர், லேசான மழை, கொசுக்கடி போன்ற பல்வேறு இன்னல்களுக்கு இடையே மக்கள் காத்திருந்தனர். அதிகாலையில் வந்த சுகாதாரத்துறை அலுவலர்கள் 300 பேருக்கு மட்டுமே டோக்கன்கள் வழங்கப்படும் எனக் கூறியதால், இரவு முழுவதும் காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சிலர் அடுத்த நாளுக்கான டோக்கன்களை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தடுப்பூசி மையங்களில் குவியும் மக்கள்
தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்ட போது மக்கள் அதை செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டவில்லை. ஆனால் கரோனா 2ஆவது அலையில் உயிரிழப்புகளும், பாதிப்புகளும் அதிகரித்ததால் மக்களிடையே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இரவு, பகல் பாராமல் தடுப்பூசி மையங்களில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.
மேலும் ஊழியர்கள் தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே பணிக்கு வர வேண்டும் என பல தனியார் நிறுவனங்கள் கட்டுபாடு விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் இளைஞர்களும் அதிகளவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.
கோவை மாவட்டத்தில் இதுவரை 9 லட்சத்து 72 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நோய் பரவும் அபாயம்
தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டுவதால், அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். அதே வேளையில் தடுப்பூசி மையங்களில் மக்கள் அதிகளவில் கூடுவதால் நோய் பரவல் அபாயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் குடும்ப அட்டை அடிப்படையில் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் நடைமுறை குறித்து அரசு ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதையும் படிங்க: இளசுகளே உஷார்- கோவிட் 3ஆம் அலை!