கோயம்புத்தூர்: கடந்த 1998ஆம் ஆண்டு கோவையின் பல்வேறு இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அதேநேரம் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது.
தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக சுமார் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அதில், கோவை உக்கடத்தைச் சேர்ந்த அபுதாகிர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும், 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி மதுரை ஜெயில் துணை வார்டன் ஜெயபிரகாஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் அபுதாகிருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
இதனால் அபுதாகிர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த அபுதாகிருக்கு, சிறுநீரக கோளாறு உள்ளிட்ட பல்வேறு உடல்நல பிரச்னைகள் ஏற்பட்டதால், பந்தய சாலையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அபுதாகிர் நேற்று (பிப்.8) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று (பிப்.9) காலை அவரது உடல் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள திப்புசுல்தான் பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்படுவதால், நூற்றுக்கணக்கான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சாதி மறுப்புத் திருமணம் செய்த பெண் மீது தாக்குதல்; தட்டிக்கேட்ட போலீஸுக்கு சாவி குத்து