கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவர் தொட்டிபாளையம் பகுதியில் ’நெல்லை லாலா ஸ்வீட்ஸ்’ என்ற பெயரில் இனிப்பு, பலகாரங்கள் விற்கும் கடை ஒன்றை நடத்திவந்தார். இவர், "கரோனா ஒரே நாளில் குணமாக எங்கள் கடை மூலிகை மைசூர்பா சாப்பிடுங்கள்" என்று நோட்டீஸ் அச்சடித்து ஊர் முழுக்க கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார்.
அந்த நோட்டீஸில், ”19 மூலிகைகள் பயன்படுத்தி இந்த மைசூர்பா தயாரிக்கப்பட்டுள்ளது. மைசூர்பாவின் பார்முலாவை பணம், பொருள் என்ற எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி இலவசமாக தரவும் தயாராக உள்ளோம். இந்தியா வல்லரசாகும் என்ற அப்துல் கலாம் அவர்களின் கனவை நிறைவேற்றவும், இறந்த அவரது ஆத்மா சாந்தி அடையவும் துணை நிற்போம். கரோனா அறிகுறிகள் இருக்கும் வீட்டிற்குத் தேடிச் சென்று, இதை இலவசமாகக் கொடுக்கவும் தயாராக உள்ளோம்” போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாகத் தவறான தகவல் பரப்பிய சித்த வைத்தியர் தணிகாசலம் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மூலிகை மைசூர்பா என்று வித்தியாசமான மருந்தோடு வந்திருக்கும் இனிப்புக் கடை ஸ்ரீராம் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், கோவை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில், அந்தக் கடையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது கடையின் உரிமையாளர் ஸ்ரீராமிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதுமட்டுமின்றி கடைக்காரர்கள் சித்த மருத்துவர் துறையிடம் அனுமதி பெறாமலேயே மூலிகைகளைத் தயாரித்து மைசூர்பாவில் கலந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து அக்கடைக்கு அலுவலர்கள் சீல் வைத்தனர். தற்போது அந்த மூலிகைப் பொடியை ஆய்வுக்கு உட்படுத்தும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 'ஒரே நாள்ல கரோனா குணமாகனுமா எங்க கடை மைசூர்பா சாப்பிடுங்க' - சர்ச்சையைக் கிளப்பிய ஸ்வீட் கடை ஓனர்