கோவை: கோவை கார் வெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் இன்று முதல் கட்டமாக 6 பேருக்கு எதிரான குற்றப்பத்திரிக்கையினை தாக்கல் செய்தனர். அந்த குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு அதிர்ச்சிகரத் தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.
அதில் கோவை உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரர் கோவில்(கோட்டை ஈஸ்வரன் கோவில்) அருகில் ஜமேஷா முபின் ஓட்டிச் சென்ற வெடிபொருட்கள் ஏற்றிச்சென்ற வாகனம் வெடித்துச் சிதறியதில் முபின் உயிரிழந்தார் எனவும்,இந்த தாக்குதலை நடத்திய ஜமேஷா முபின், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு இருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தும் முன்பாக, 'பயாத்' எனப்படும் உறுதி பிரமாணம் எடுத்து இருக்கின்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முபினின் உறவினரான முகமது அசாருதீனிடம் இருந்து கைப்பற்றபட்ட பென் டிரைவில், ஜமேஷா முபினின் வீடியோ பதிவுகள் இருந்ததாகவும், அதில் அவர் தன்னை ஐஎஸ் அமைப்பின் உறுப்பினராக அடையாளப்படுத்தி இருப்பதாகவும் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 2019ஆம் ஆண்டு நடந்த ஈஸ்டர் தற்கொலை படைத் தாக்குதலை நடத்த காரணமான இஸ்லாமிய மதகுரு சஹ்ரான் ஹாஷிமின் பிரசங்கங்களால் முபின் ஈர்க்கப்பட்டார் எனவும் , அதைப் போல் தாக்குதல் நடத்த திட்டமிட்டே இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ஜமேஷா முபினின் வீட்டில் இருந்து கையால் எழுதப்பட்ட குறிப்புகள் கைபற்றப்பட்டதாகவும், அதில் இஸ்லாமிய சட்டங்கள் குறித்தும், அரசாங்க அலுவலகங்கள், மாவட்ட நீதிமன்றம், பூங்கா, ரயில் நிலையம்,கோவில்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களை இலக்குகளாக குறித்து வைத்திருந்ததாகவும் குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இணைய இதழும் இந்த தாக்குதலை அவர்கள் நடத்தியதை உறுதிபடுத்துகின்றது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் ஜமேஷா முபினுக்கு அவரது கூட்டாளிகளான முகமது அசாருதீன், முகமது தல்ஹா, பெரோஸ், முகமது ரியாஸ், நவாஸ் மற்றும் அஃப்சர் கான் ஆகியோர் தளவாடங்களை ஏற்பாடு செய்வதிலும், காரை தல்ஹா என்பவர் வாங்கி கொடுக்க பெரோஸ், ரியாஸ் , நவாஸ் ஆகியோர் காரில் வெடிபொருட்கள், எரிவாயு சிலிண்டர்கள் போன்றவற்றை ஏற்றி, அதனை சக்தி வாய்ந்த வெடிக்கும் ஆயுதமாக மாற்றியதாகவும்,
முபினின் உறவினர்களான அசாருதீன் மற்றும் அப்சர்கான் ஆகிய இருவரும் தாக்குதலுக்குத் தேவையான ரசாயன மூலக்கூறுகளை கொள்முதல் செய்து கொடுத்து இருந்ததாகவும் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஆறு பேர் மீது முதல்கட்டமாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மற்ற ஐந்து பேர் மீது விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனிடையே மங்களூருவில் நடந்த குக்கர் குண்டுவெடிப்பு கேரளாவில் ரயிலில் தீவைக்கப்பட்ட சம்பவம் இவை அனைத்திற்கும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. எனவே உளவுத்துறையில் செயல்பாடுகளை காவல்துறை முடக்கி விடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
இதையும் படிங்க: சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசு - கோவை விவசாயிகள் வேதனை!