கரோனா ஊரடங்கால் முடங்கியுள்ள கோவையின் பல்வேறு பகுதி மக்களுக்கு அரசு, தொண்டு நிறுவனங்கள் பல்வேறு உதவிகளைச் செய்துவருகின்றன. இந்நிலையில், கோவை தொண்டாமுத்தூர் பகுதியிலுள்ள பூளுவாம்பட்டி அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 328 குடும்பங்களுக்கு மளிகைப் பொருள்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்பை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார்.
அனைவரும் தகுந்த இடைவெளி பின்பற்றி நிவாரணப் பொருள்களை வாங்கிச் சென்றனர். நிகழ்வில், வாழ்வாதரத்தை இழந்து தவிக்கும் இலங்கைத் தமிழர் குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளும் அரசு சார்பில் செய்துதரப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
பேருந்து நிலையங்கள் தயார்
மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில், இன்று முதல் கட்டுப்பாடுகளுடன் பேருந்துகள் குறைந்தளவு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து நேற்று வரை தற்காலிக காய்கறிச் சந்தைகளாக செயல்பட்டுவந்த காய்கறிச் சந்தைகள் அகற்றப்பட்டு பேருந்து நிலையங்கள் அனைத்தும் தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன.
காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் பேருந்து நிலையங்கள் அனைத்தும் பயன்பாட்டுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சாய்பாபா காலனி மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் வெங்காயம், தக்காளி மொத்த வியாபாரம் செய்து வந்த வியாபரிகளுக்கு ஜி.சி.டி அருகில் இடம் ஒதுக்கப்பட்டது.

அரசின் இந்த திடீர் முடிவாலும் காய்கறி சரக்குகளை புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு எடுத்துச் செல்வது கடினமான விஷயம் என்பதாலும் வியாபாரிகள் செய்வதறியாது தவிக்கின்றனர். இதனால், கடைகளை மாற்ற மூன்று நாள்கள் அவகாசம் கேட்டு வியாபாரிகள் அரசு அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: ரயில் நிலையம் நோக்கி நடந்த வடமாநில தொழிலாளர்கள் - திருப்பி அனுப்பிய போலீஸார்