கோயம்புத்தூர் கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள உக்கடத்தை சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), ஜி.எம்.நகரைச் சேர்ந்த முகமது ரியாஸ் (27), ஃபிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகிய 5 பேரையும் தனிப்படை போலீசார் 3 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
5 பேரையும் தனித்தனியாக அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கார் வெடிப்பு சம்பவம் "ஒற்றை ஓநாய் தாக்குதல் முறை" (Lone wolf attack) முறையை ஒத்திருப்பது தெரியவந்துள்ளது. ஜமீஷா முபீன் தனது நெருங்கிய உறவினர்களாக அசாரூதீன் மற்றும் அப்சர்கான் ஆகியோருடன் கோனியம்மன் கோயில் உட்பட பல கோயில்களை சமீபத்தில் நோட்டமிட்டு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 3 டிரம்களில் வெடிமருந்துகளுடன் ஆணி, கோலிகுண்டு உள்ளிட்டவற்றை நிரப்பி காரில் வைத்துக்கொண்டு ஜமீஷா முபீன் காரை கோயில் முன்பாக நிறுத்தி சிலிண்டரில் இருந்து வாயுவை திறந்து விட்டு தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்காலம் என்றும் போலீசாருக்கு சந்தேகம் உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எஐஏ விசாரணையை தொடங்கும் முன்பே கோவை மாநகர காவல் துறை முக்கிய தகவல்களை சேகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கோவையில் கார் வெடிப்பு - என்.ஐ.ஏ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் உள்ள தகவல்கள் என்ன?