கோயம்புத்தூர்: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 13ஆம் தேதி 37ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார்.
இந்த விழாவிற்கு செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்படும் தகவல் தொகுப்புடன், பல்கலைக்கழக பதிவாளர் பெயர் கொண்ட கவரில் 500 ரூபாய் பணம் வைக்கப்பட்டு வழங்கப்பட்டது.
ஆளுநர் பங்கேற்ற விழாவில், பணவிநியோகம் செய்யப்பட்ட நிகழ்வு பத்திரிகையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜிடம் பத்திரிகையாளர்கள் முறையிட்டு பணம் அடங்கிய கவரை திருப்பி அளித்தனர்.
இதுகுறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழுவை பாரதியார் பல்கலைக்கழகம் அமைத்தது. குழுவின் விசாரணையில் பணம் கொடுத்ததற்கு காரணமான மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரையை பாரதியார் பல்கலைக்கழக நிர்வாகம் பதவியில் இருந்து நீக்கியதாகவும்; மேலும் புதிய மக்கள் தொடர்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆளுநர் விழாவில் பத்திரிகையாளர்களுக்குப் பணவிநியோகம் - எரிச்சல் அடைந்த பத்திரிகையாளர்கள்!