கரோனா தீவிரத்தால் இந்தியாவின் அனைத்து மூலைகளும் முடக்கப்பட்டுள்ளன. மருத்துவம், உணவு போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து முற்றிலும் தடைப்படுள்ளதால் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
இந்த ஊரடங்கு அனைத்து தரப்பினருக்கும் கடும் பாதிப்பைக் கொடுத்தாலும், இதனால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் அடுத்த வேளை சோற்றுக்காக தங்கள் சொந்த ஊரை விட்டு வேறு மாநிலங்களுக்குச் சென்று வேலை புரியும் தொழிலாளர்கள்தான். குறிப்பாக தமிழ்நாட்டில் உயர்ந்து நிற்கும் மேம்பாலங்கள் போன்ற கட்டுமானங்களுக்குப் பின்னால் வடமாநில தொழிலாளர்களின் அபரிதமான உழைப்பு அடங்கியிருக்கிறது.

சென்னை, கோவை போன்ற பெருநகரங்களின் பிரமாண்ட சாலைகளின் ஒரு ஓரத்தில் தகரத்தால் ஆன சிறிய கொட்டகையில் தங்களது எஞ்சிய வாழ்வை அவர்கள் கழிக்கின்றனர். ஏனெனில் இவர்களின் பெரும்பாலான நேரம் தொழில் செய்யும் இடத்திலேயே முடிந்துவிடுகிறது.
வயிற்றுப் பிழைப்புக்காக ஓடாய் தேயும் இவர்களுக்கு, பெரும்பான்மை மக்களின் சிறிய அனுசரனைகூட கிடைக்காதது அவலத்தின் உச்சம். ஆனால் இதற்கும் உலை வைத்துள்ளது கரோனா. அனைத்து வேலைகளும் போட்டது போட்டபடியாக பாதியில் தொக்கி நிற்பதால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

இருப்பினும் சமூகத்தின் மீதும் மக்கள் மீதும் அக்கறை கொண்ட சிலர், ஊரடங்கில் இவர்களின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனர். இப்படியான ஒரு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களுக்கு மருத்துவ வசதி எவ்வாறு கிடைக்கும் என்பதை அவரவர் கற்பனைக்கே விட்டு விடலாம்.
அதிலும் கர்ப்பிணியாக இருந்து பிரசவ வலி ஏற்பட்டால் எத்தனை இன்னல்களை அந்த பெண் சந்திப்பார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அவ்வாறு கோவையில் வலியால் துடித்த ஒடிசா பெண்ணுக்கு பிரசவம் பார்த்து தாயையும், சேயையும் காப்பாற்றியிருக்கிறார் ஆட்டோ சந்திரன் என அழைக்கப்படும் ‘லாக் அப்’ நாவலாசிரியர் சந்திரகுமார்.

கோவை சிங்காநல்லூர் காமராஜர் சாலை அருகே இருக்கும் துளசி லே அவுட் பகுதியில் ஒடிசா மாநில தொழிலாளர்கள் வசிக்கிறார்கள். இவர்கள் அங்குள்ள ரயில்வே கேட் அருகே தகர கூடாரம் அமைத்து தங்கியிருக்கின்றனர்.
இங்கு வசிக்கும் 26 வயது மதிக்கத்தக்க ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வாகன வசதி இல்லாததால் அவருடைய கணவர் செய்வதறியாது திணறியுள்ளார். அக்கம்பக்கத்தினரை அழைத்து உதவிசெய்யுமாறு முறையிட்டுள்ளார்.
அனைவரும் சேர்ந்து பிரசவ வலியால் கதறிய அப்பெண்ணை தோளில் தூக்கிச் சென்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு அவர்கள் அமர வைத்துள்ளனர். ஆனால், மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியாததால் அங்கிருந்த கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி பழனிசாமியிடம் பெண்ணின் நிலையை எடுத்துக் கூறி ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தருமாறு வேண்டினர்.
அவர் உடனடியாக 108 ஆம்புலன்ஸை தொடர்புகொண்டு தகவல் அளித்தார். ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்கு நேரம் ஆனதாலும், வலியால் அப்பெண் துடித்ததாலும், ஆட்டோ ஓட்டுநரும், ‘விசாரணை’ படத்தின் அசல் வெர்ஷனான லாக் அப் நாவலின் ஆசிரியருமான சந்திரகுமாரிடம் உடனடியாக ஆட்டோவை எடுத்து வருமாறு தெரிவித்தார். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து உதவிக்காக வீட்டிலிருந்த தனது மகள் ஜீவாவையும் உடன் அழைத்துக்கொண்டு சந்திரன் கர்ப்பிணி பெண் இருந்த இடத்திற்கு ஐந்தே நிமிடங்களில் வந்துள்ளார்.
அவர் அங்கு சென்று அப்பெண்ணை தூக்கி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோது, பனிக்குடம் உடைந்து ரத்த வெள்ளத்தில் மயக்க நிலையில் அப்பெண் இருந்துள்ளார். இதனிடையே 108 ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் தானே பிரசவம் பார்க்கலாம் என்று சந்திரன் முடிவெடுத்தார்.
ஆனால், அவரை பிரசவம் பார்க்க முதலில் அனுமதிக்காத அப்பெண், தன்னிடம் ஹிந்தியில் சந்திரன் பேசியதையடுத்து அவரை அனுமதித்துள்ளார். அதன்படி அவர் குழந்தையின் தலையை இலகுவாக பிடித்து இழுத்து வெற்றிகரமாக பிரசவம் பார்த்துள்ளார்.
அவர் குழந்தையை வெளியில் எடுத்த உடனே அங்கு 108 ஆம்புலன்ஸில் வந்த மருத்துவர் ஒருவர் தொப்புள் கொடியை அறுத்துள்ளார். பின்னர் தாயையும், குழந்தையையும் ஆம்புலன்ஸில் ஏற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிகழ்வுகளை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார். தற்போது இந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது. சந்திரகுமாருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணமே உள்ளன.
சமூகத்தின் ஒட்டுமொத்த பிரதிபலிப்புதான் நாவல் என்பார்கள். மக்களைக் கூர்ந்து கவனித்து நாவல் எழுதும் ஆசிரியர்கள் அவர்களுக்கு ஒரு துயர் என்றால் இறங்கி சேவையாற்றவும் தயங்க மாட்டார்கள் என்பதற்கு ’லாக் அப்’ சந்திரகுமார் ஒரு சிறந்த உதாரணம்.
‘பிரசவத்திற்கு இலவசம்’ என்பது ஆட்டோவில் எழுதப்பட்டிருக்கும் வெறும் வாசகம் மட்டுமல்ல. அதற்கு நியாயம் செய்யும் வகையில் நிஜத்திலும் எந்த நேரத்திலும் மக்கள் சேவையில் நாங்கள் முழுவதுமாக ஈடுபடுவோம் என்பதை உணர்த்தி ஒட்டுமொத்த ஆட்டோ ஓட்டுனர்களின் முகமாக பிரதிபலிக்கிறார் ஆட்டோ சந்திரன் என்ற சந்திரகுமார்!