கோவை மாவட்டத்தில் அதிமுக கூட்டணியில் 10 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து இன்று (மே 27) மனு அளித்தனர்.
அவர்கள் அளித்த மனுவில், "மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள், கல்லூரிகளில் கூடுதல் ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். ஆக்ஸிஜன் படுக்கை வசதி குறித்த உண்மை நிலைமையை தகவல் கட்டுப்பாட்டு மையத்திற்கும் செய்தித்தாள்கள், ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கும் வெளிப்படையாகத் தெரிவிக்க உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், கறுப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குத் தேவையான சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தவும், அது தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்துக் கூறவும் வேண்டும்.
மாவட்டம் முழுவதும் உள்ள மக்களுக்கு அவரவர் வசிக்கும் பகுதிகளிலேயே காய்கறிகள், பழங்கள், அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க நடமாடும் வாகனங்கள் மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
பொது மக்களுக்குப் போதுமான அளவு தடுப்பூசிகள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், மேலும் அந்த தடுப்பூசிகளை பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே போட்டுக் கொள்வதற்கு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவினை கோவை மாவட்ட சட்டபேரவை உறுப்பினர்களான எஸ்.பி வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், பி.ஆர்.ஜி அருண்குமார், அம்மன் கே. அர்ஜுனன், தாமோதரன், செல்வராஜ், வி.பி.கந்தசாமி, அமுல் கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம், வானதி சீனிவாசன் ஆகியோர் இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.
இதையும் படிங்க: செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை குத்தகைக்கு விடக்கோரி பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்