நீட் தேர்வை ரத்து செய்ய கோரி இன்று (செப்டம்பர் 8) தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி, கோவை உக்கடம் கோட்டை மேடு பகுதியில் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் நீட் தேர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், கலந்துகொண்டவர்கள் மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பியதோடு, மருத்துவர் போன்ற ஒரு பொம்மைக்கு இறுதிச்சடங்கு செய்து நூதன முறையில் எதிர்ப்பை காட்டினர். மேலும், புறாவின் மூலம் 'நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்' என வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் அனுப்பினர்.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் க. பொன்முடி தலைமை தாங்கினார். போராட்டத்தில் முன்னாள் எம்பி லட்சுமணன் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் திம்மங்குது சக்திவேல், நகர இளைஞரணி அமைப்பாளர் திருமலை ராஜா, மாவட்ட மாணவரணி முத்துக்கண்ணன், ரஞ்சித் உள்ளிட்டோர் பங்குபெற்றனர்.
இதேபோல், கோவை புறநகர் தெற்கு மாவட்டம் நெகமம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சபரி கார்த்திகேயன் தலைமையில் திமுகவினர் பங்கேற்று நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
திருச்சி
திருச்சி திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் திமுக முதன்மைச் செயலாளர் அலுவலகம் முன்பு நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் தர்மராஜ், வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சிவதாஸ் தலைமையில் அவரது வீட்டின் முன்பும், திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் மூவலூர் மூர்த்தியின் வீட்டின் முன்பும் திமுகவினர் திரண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: 'பொன்மலை ரயில்வே பணிமனையில் தமிழர்களை நியமிக்க வேண்டும்' - மணியரசன்