கோயம்புத்தூர் ஆவாரம் பாளையம் பகுதியில் அனைத்து தொழிற்கூட்டமைப்பின் நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். (கொடிசியா, சீமா, காட்மா, கோப்மா உள்பட பல்வேறு சங்கங்கள்) இதில், கொடிசியா அமைப்பின் தலைவர் ராமமூர்த்தி கூறியதாவது, "கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சிறு, குறு தொழில்களுக்கு மத்திய அரசு அறிவித்த பல திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் காலதாமதம் ஏற்படுகிறது.
ஊரடங்கு காரணமாக தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கி கடன்களை திரும்ப செலுத்த நிர்பந்திக்கப்படுகிறது. எனவே, வங்கி கடனை திருப்பி செலுத்த இரண்டாண்டு காலம் அவகாசமளிக்க வேண்டும். தற்போது தொழில்கூடங்கள் 50 விழுக்காடு மட்டுமே இயங்குகின்றன. சொந்த ஊருக்கு சென்ற வடமாநில தொழிலாளர்கள் மீண்டும் திரும்பி வர தயாராக இருக்கின்றனர்.
மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை குறைத்தால், பொது மக்களுக்கு வாங்கும் திறன் அதிகரிக்கும், எனவே மூன்று மாதங்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும். வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களை அழைத்து வர இ-பாஸ் விரைவாக வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரினார்.
இதையும் படிங்க: திருமணத்திற்கு மறுப்பு : சினிமா பாணியில் கடத்தப்பட்ட காதலி