கோயம்புத்தூர்: கோடை விடுமுறையைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிலும் அரசுப்பள்ளிகளை நோக்கி வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பெரும்பாலான அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைப் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.
ஆனால், இதற்கெல்லாம் மாறாக, கோயம்புத்தூர் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள தாணிக்கண்டி பழங்குடியின கிராமத்தில் செயல்பட்டு வந்த அரசு தொடக்கப்பள்ளி, எந்தவொரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மூடப்பட்டுள்ளது. காரணம், அங்கு எந்தவொரு மாணவர்களும் தற்போது படிப்பதில்லை.
அதேநேரம், புதிதாக தொடக்கப்பள்ளி வகுப்புகளில் சேர்வதற்கு இந்த கிராமத்தில் எந்த மாணவரும் இல்லை. மேலும் ஏற்கெனவே இந்த தொடக்கப்பள்ளியில் படித்து வந்த மாணவர்கள், ஆரம்பக்கல்வியை இங்கு முடித்து விட்டு உயர் நிலை கல்விக்காக 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு பள்ளிக்குச் சென்று விட்டனர்.
நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு: ஆரம்பக் கல்விக்கு புதிய மாணவர்கள் இல்லை என்பதால், இந்த பள்ளி மூடப்பட்டுள்ளதாக கிராம மக்கள் கூறுகின்றனர். அதேநேரம், இந்த தொடக்கப்பள்ளியை நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தினால் தங்கள் கிராம மாணவர்கள் மட்டுமின்றி சுற்று வட்டார கிராம மாணவர்களும் பயன்பெறுவதுடன், அந்தப்பள்ளி மீண்டும் இயங்கும் நிலைக்குத் திரும்பும் என்பதே கிராம மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
தொடர்ந்து, பழங்குடியின மக்களின் குழந்தைகளுக்கு ஆரம்பக்கல்வியை இதுநாள் வரை வழங்கி வந்த இந்த பள்ளிக்கூடம் தொடர்ந்து இயங்க வேண்டும். இல்லாவிட்டால் பள்ளி நிரந்தரமாக மூடப்பட்டு, எதிர்காலத்தில் பள்ளிக் கல்விக்காக மாணவர்கள் வெகு தூரம் பயணிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவார்கள் என்பது கிராம மக்களின் வேதனைக்குரலாக உள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை அலுவலர்கள் கூறுகையில், 'தாணிக்கண்டி கிராமத்தில் ஆரம்பத்தில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருந்த நிலையில், மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து கடந்த ஆண்டு ஒரே ஒரு மாணவர் மட்டுமே பயின்று வந்தார். அவரும் 5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று சென்றுவிட்டதால், இந்த ஆண்டு சேர்க்கை இல்லாததால் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மேலும் ஆசிரியர்கள் மற்றும் சமையலர் ஆகியோர் அருகில் உள்ள பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளனர். மீண்டும் மாணவர் சேர்க்கை வந்தால் பள்ளி செயல்படும். விரைவில் அவை நிரப்பப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது. எனவே, அரசுப்பள்ளிகளில் தொடர்ந்து அதிகரிக்கும் மாணவர்கள் சேர்க்கைக்கு ஏற்ப இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: போதையில் புத்தி மாறிய இளைஞரை போட்டுத்தள்ளிய 'அக்கா கேங்க்'