கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதியில் சுற்றித்திரிந்த சின்னத்தம்பி யானைக்கு ஜனவரி 25ஆம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு ரேடியோ காலர் பொறுத்தி, வரகளியாறு வனப்பகுதியில் விடப்பட்டது. உடுமலைப்பேட்டையிலிருந்து சின்னத் தம்பியை பிடித்து வேறு பகுதியில் விட வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். வனத்துறை அமைச்சரும் சின்னதம்பியை முகாமிற்கு கொண்டு செல்ல உள்ளதாக அறிவித்தார்.
ஆனால் சின்னத்தம்பிக்கான ஆதரவு மக்களிடத்தில் பெருகியது. சின்னதம்பியை வரகளியாறு கொண்டு செல்லக் கூடாது என கோவை மக்கள் வலியுறுத்தி பல போராட்டங்களை நடத்தினர். மக்களின் போராட்டத்தை மீறி வரகளியாறு யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்டான் சின்னத்தம்பி. இதனைத்தொடர்ந்து கூண்டில் அடைக்கப்பட்ட சின்னதம்பியை வளர்ப்பு யானையாக மாற்றுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். மக்களின் செல்லப்பிள்ளையான சின்னதம்பி தற்போது என்ன ஆனான் என்பது அதற்கு பயிற்சி அளிக்கும் பாகன்களுக்கு மட்டுமே தெரியும்.
தற்போது, சின்னதம்பிக்கு வளர்ப்பு யானைக்கான ஆரம்ப கட்ட பயிற்சிகள் முடிந்து, பாகன்கள் அதன் முதுகில் ஏறி கட்டளைகளை இடும் பயிற்சி துவங்கியுள்ளது. இன்னும் சில வாரங்களில் கூண்டில் இருந்து சின்னதம்பி யானை வெளியே எடுக்கப்பட உள்ளது. இதுகுறித்து யானை பாகன்கள் கூறுகையில், 'வழக்கமாக காட்டு யானைகளை வளர்ப்பு யானையாக மாற்றுவது,எங்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால். சின்னத்தம்பி யானை பழக்கப்பட்ட யானைபோல் எங்களின் பேச்சை கேட்பது எங்களுக்கு மிகிழ்ச்சியாக உள்ளது.
அன்றும் இன்றும் மக்களின் பேச்சை கேட்கும் இந்த சின்னத்தம்பி எதிர்காலத்தில் ஒரு நல்ல ஒரு யானையாக வளரும். ஆரம்ப கட்ட பயிற்சிகளும் தமிழ், உருது, மலையாள பாஷைகள் மூலம் சாப்பிட கற்றுக்கொடுக்கிறோம்' என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
மேலும், சின்னதம்பி யானை கவலைக்கிடமாக உள்ளதாக வெளியான செய்திகள் வதந்தி என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சின்னதம்பிக்கு பாகன்கள் பயிற்சி கொடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.