சென்னையிலிருந்து சேலம் செல்ல விமானம் மூலம் கோவை வந்த முதலமைச்சர் பழனிசாமி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நீட் தேர்விலிருந்து யாருக்கும் விலக்கு கொடுக்கப்படவில்லை. நீட் தேர்வு கூடாது என்பதுதான் அதிமுக நிலைப்பாடு.
நீட் தேர்வினால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால் 7. 5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. நான் கிராமத்திலிருந்து வந்தவன் என்பதால், அரசுப்பள்ளி மாணவர்களின் நிலை அறிந்து உள் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது.
இன்று (நவ. 18) 313 பேர் இட ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். சசிகலா சிறையில் இருந்து வெளியில் வருவது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. புதிய கல்வி கொள்கை குறித்து குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு அறிக்கையை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
அப்போது பத்திரிகையாளர் ஒருவர், 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு கொடுத்ததற்கு பெருமை பேசுகிறீர்கள், ஆனால் மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வு இல்லையே என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு முதலமைச்சர் பழனிசாமி, "7.5 விழுக்காடுனா என்னவென்று தெரியுமா? தேவையில்லாமல் பேசாதீர்கள். நான் கிராமத்திலிருந்து வந்தவன். உள் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதற்கு உண்மையில் பெருமைகொள்கின்றேன்" என்றார்.
இதையும் படிங்க: வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும் - ஸ்டாலினுக்கு விஜயபாஸ்கர் எச்சரிக்கை