கோவை: பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்க இரண்டு நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூர், ஈரோடு, திண்டுக்கல் செல்கிறார். இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்ற முதலமைச்சருக்கு அமைச்சர்கள், கட்சித் தொண்டர்கள், பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கோவை சாய்பாபா காலனியில் உள்ள மறைந்த முன்னாள் வால்பாறை எம்.எல்.ஏ கோவை தங்கம் வீட்டிற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். கோவை தங்கம் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் அங்கிருந்து ஈரோடு புறப்பட்டுச் சென்றார். அங்கு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இன்று இரவு கரூர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு ஓய்வெடுக்கிறார். நாளை காலை 10 மணிக்கு அரவக்குறிச்சி பகுதியில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
தொடர்ந்து பிற்பகலில் திண்டுக்கல் காந்தி கிராமம் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியுடன் காந்தி கிராமம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.
இதையும் படிங்க: தேர்ந்தெடுக்கப்பட்ட அக்கவுண்ட்களுக்கு ”ப்ளூ டிக்” சேவை நிறுத்தம்! டிவிட்டர் அதிரடி