கோயம்புத்தூர் வஉசி மைதானத்தில், தொல்லியல் துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் தொல்பொருள்கள் கண்காட்சி மற்றும் தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனையின் ஓவிய கண்காட்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (மே 19) திறந்து வைத்து பார்வையிட்டார்.
இதில் கீழடி வைகை நதிக்கரையின் நகர நாகரிகம், பொருநை ஆற்றங்கரை நாகரிகம், கொடுமணல் சங்க காலத் தொழிற்கூடம், மயிலாடும்பாறை 4ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமையான இரும்புக் காலப் பண்பாடு, ஆகியவை குறித்த தொல்பொருள்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
மேலும், தமிழ்நாடு அரசின் ஓராண்டில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள், சாதனைகள் உள்ளிட்டவற்றை விளக்கிடும் ஓவியங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்த கண்காட்சி திறப்பு விழாவில் அமைச்சர்கள் தென்னரசு, சாமிநாதன், செந்தில் பாலாஜி, கயல்விழி மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ராசா, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டு சென்றதைத் தொடர்ந்து துர்கா ஸ்டாலின் பார்வையிட்டார். இதில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஓவியர் வெங்கடேஷ் என்பவர் முதலமைச்சரின் முகத்தை கடுகில் வரைந்திருந்தார். மேலும், முதலமைச்சரின் வாழ்க்கை வரலாற்றை எழுத்துகளால் ஓவியம் வரைந்திருந்தது அனைவரையும் கவர்ந்தது. தொடர்ந்து அந்த ஓவியம் முதலமைச்சருக்கு பரிசளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: 1 கோடியே 37 லட்சம் குடும்பங்கள் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் பயனாளிகளாக உள்ளனர் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!