கோவையைச் சேர்ந்த அருண் ஜுடே அமல்ராஜுக்கும் ஆர்த்தி என்ற பெண்ணுக்கும் 2008ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில், 2014ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
அண்மையில் கணவன் மனைவி இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்தனர். இதனிடையே இந்தத் தம்பதி கோடை விடுமுறையை கொண்டாட குடும்பத்துடன் ஊட்டி சென்றனர். அப்போது அங்கு அருண் மீண்டும் ஆர்த்தியை அடித்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து ஆர்த்தி ஊட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல் துறையினரின் சமரச பேச்சுவார்த்தையை அடுத்து அருண் மன்னிப்புக் கடிதம் எழுதி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் அருண், ஆர்த்தி, குழந்தைகள், அருணின் பெற்றோர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மீண்டும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து ஆர்த்தியை ஓடும் காரில் இருந்து தள்ளிவிட்டனர். இந்தக் காட்சி அப்பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
கீழே தள்ளிவிடப்பட்டதில் ஆர்த்தியின் தலை, தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. இது குறித்து ஆர்த்தி துடியலூர் காவல் நிலையத்தில் அருண் மீதும் அவரது பெற்றோர் மீதும் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் அவர்களை தேடிவருகின்றனர்.
ஓடும் காரில் இருந்து பெண் ஒருவர் தள்ளிவிடப்பட்ட சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.