கோவை: தடாகம் பகுதியில் கடந்த ஒரு மாதமாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து அதிக பயிர் சேதத்தை ஏற்படுத்துவதாக தடாகம் பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் அதிகாலை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி நரசிம்மராஜ் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்த இரண்டு ஆண் யானைகள், மாட்டுகொட்டகைக்குள் புகுந்து அங்கிருந்த தவிடு, புண்ணாக்கு, மக்காச்சோள கருதுகளை சாப்பிட்டு சென்றன.
அதோடு அருகிலிருந்த பொருள்களையும் சேதப்படுத்தின. இதை காலையில் அறிந்த நரசிம்மராஜ் சிசிடிவியை ஆய்வு செய்தார். அதில் யானைகள் வந்து செல்வது பதிவாகியிருந்தது. வனப்பகுதியில் இருந்து மாலை நேரத்தில் யானைகள் வெளியே வருவது வழக்கமாகிவிட்டது. இந்த நேரத்தில் வனத்துறை விரட்டும் பணியில் ஈடுபட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'தமிழ்நாடு வாழ்க' கோவை மக்கள் நீதி மய்யம் போஸ்டர்!