கோயம்புத்தூர்: மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் காளியப்பன் (25). இவர், கோவை கோவில்பாளையம் பகுதியிலுள்ள பழக்கடையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், காளியப்பன் தனது சொந்த ஊரான மதுரைக்குச் சென்றுவிட்டு மீண்டும் கோவைக்கு நேற்று (ஏப்.27) தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.
சூலூர் ரங்கநாதபுரம் அருகே வேகமாக கொண்டிருந்தபோது சாலையில் இருந்த பள்ளத்தை கவனிக்காமல் அதனுள் வாகனத்தில் இறக்கியதில் வாகனம் நிலைதடுமாறி வலது புறமாக கீழே விழுந்தது. அப்போது, பின்னால் வந்த அரசுப் பேருந்து ஒன்று காளியப்பன் மீது ஏறியது.
பேருந்தின் முன்சக்கரம் அவர் மீது ஏறி இறங்கிய நிலையில் பின் சக்கரமும் ஏறியது. இந்தக் கோர விபத்தில் காளியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் காவல் துறையினர், காளியப்பனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை மூடக்கூறியும், பள்ளம் இருந்தால் அந்த இடத்தில் வாகனம் செல்லாதபடி ஏதேனும் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட வேண்டும் என மாநகராட்சிக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: திருடுபோன பைக்கை துணிந்து சென்று மீட்ட தடகள பயிற்சியாளர்!