கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் அரசு கலைக்கல்லூரி 5.36 ஏக்கர் நிலப்பரப்பில் 8 கோடி மதிப்பில் கட்டுவதற்காக தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் வேலுமணி கலந்துக்கொண்டு அடிக்கல்லை நாட்டினார். மேலும் இந்நிகழ்ச்சியில் 70 வருடங்களாக பட்டா இல்லாமல் வசித்து வருபவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது.
பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை தீர்க்கும் வகையில் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் இங்கு கல்லூரி கட்டப்பட உள்ளது. இதுவரை பள்ளி வளாகத்துடன் இணைந்து கல்லூரி செயல்பட்டு வந்த நிலையில் தற்போது கல்லூரிக்கென தனி கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நடப்பட்டுள்ளது.
தொண்டாமுத்தூரில் 2 கோடி செலவில் பேருந்துநிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. 50 ஆண்டு கால வளர்ச்சியை 5 வருடத்தில் தந்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.