இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் மன்னன் என்று அழைக்கப்படும் அங்கோடா லொக்கா கோவையில் பிரதீப் சிங் என்ற பெயரில் பீளமேடு பகுதியில் வசித்துவந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் இறந்தார். அவரது உடலை அவரது காதலி என்று கூறப்படும் அமானி தான்ஜி, மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமசுந்தரி ஆகியோர் போலி ஆவணங்களைக் கொண்டு மதுரையில் தகனம் செய்தனர்.
மூவர் கைது
இது காவல் துறையினருக்குத் தெரியவர அங்கோடா லொக்கா இறப்பு குறித்து பீளமேடு காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ளத் தொடங்கினர். அவர் கொலைசெய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்திவந்த காவல் துறையினர், இது தொடர்பாக அமானி தான்ஜி, சிவகாமசுந்தரி, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தியானேஷ்வரன் ஆகிய மூவரைக் கைதுசெய்தனர்.
அதன்பின், இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி விசாரணையில், அங்கோடா லொக்கா மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என்று கூறப்பட்டது.
ரத்த மாதிரிகளை சேகரிக்க சிபிசிஐடி திட்டம்
இருப்பினும் இறந்தது அங்கோடா லொக்கா தானா என முடிவுசெய்ய அவரது உறவினர்கள் ரத்த மாதிரிகளைச் சேகரிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், கரோனா காலத்தால் ரத்த மாதிரிகளை இலங்கையிலிருந்து பெறுவதில் தாமதமானது. தற்போது கரோனா தொற்றுப் பரவல் குறைந்துள்ளதால், அங்கோடா லொக்காவின் பெற்றோர் ரத்த மாதிரிகளை இலங்கையிலிருந்து பெறுவதற்கு சிபிசிஐடி காவல் துறையினர் தீவிரம் காட்டிவருகின்றனர்.
சிபிசிஐடி கடிதம்
இதற்கென சிபிசிஐடி காவல் துறையினர் மத்திய உள் துறை அமைச்சகத்திடம் இலங்கையிலிருந்து ரத்த மாதிரிகளை உடனடியாகப் பெற்றுத் தரக்கோரி கடிதம் வழங்கியது. இந்தக் கடிதத்தை மத்திய உள் துறை அமைச்சகம் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு வழங்கியது. இதைத் தொடர்ந்து, வெளியுறவுத் துறை அமைச்சகம் இலங்கை அரசிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
ஐஏஎஸ் அலுவலர் நியமனம்
அதுமட்டுமின்றி இந்த வழக்கை கண்காணிக்க மாநில அரசின் உள் துறை செயலகம் சார்பில் ஐஏஎஸ் அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இலங்கையில் அங்கோடா லொக்காவின் கூட்டாளி என்று கூறப்படுகின்ற சனுக்கா தனநாயக்கா என்பவர் இந்தியாவில் உள்ளார் என்று கூறப்பட்ட நிலையில், சனுக்காவை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: அங்கொடா லொக்கா மரணம் இயற்கையானது - சிபிசிஐடி