சென்னை: போச்சம்பள்ளியில் ராணுவ வீரர் பிரபு கொலை, பாஜக பட்டியலினத் தலைவர் தடா பெரியசாமி வீடு மீது தாக்குதல் ஆகிய சம்பவங்களை கண்டித்து திருவல்லிக்கேணி அண்ணாசாலை, மற்றும் சுவாமி சிவானந்தா சாலை சந்திப்பில் நேற்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரதப் போரட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மாநில துணைத்தலைவர் கரு. நாகராஜன், பால்கனகராஜ் உட்பட 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டனர். பின்னர் பாஜகவினர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு போர் நினைவுச்சின்னம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததை அடுத்து தடையை மீறி ஊர்வலமாக பாஜகவினர் சென்று போர் நினைவு சின்னம் அருகே நினைவஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் அனுமதியின்றி பேரணி சென்றதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மாநில துணைத்தலைவர் கரு. நாகராஜன் உட்பட 3000 பேர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல், பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் கூட்டம் சேர்த்தல், மாநகர காவல் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதேபோல டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலை கண்டித்து தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் சார்பில் நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பிற்படுத்தப்பட்டோர் துறை தலைவர் நவீன், தமிழ்நாடு காங்கிரஸ் பட்டியலின அணி துறை தலைவர் ரஞ்சன் குமார் உட்பட பல்வேறு காங்கிரஸ் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அவர்களை போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்து விடுவித்தனர். இந்நிலையில் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பிற்படுத்தப்பட்டோர் துறை தலைவர் நவீன், தமிழ்நாடு காங்கிரஸின் பட்டியலின அணி துறை தலைவர் ரஞ்சன் குமார் உட்பட 42 நபர்கள் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதி இன்றி கூடுதல் மற்றும் மாநகர காவல் சட்டம் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: "மனைவியே கண் கண்ட தெய்வம்" மனைவிக்கு சிலை வைத்து தினமும் பூஜை செய்யும் விவசாயி