கோயம்புத்தூர்: மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் சூயஸ் குடிநீர்த் திட்டத்தின்கீழ், குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இதற்காக கோயம்புத்தூர் ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் குடிநீர்த் தொட்டி அமைப்பதற்காகப் பள்ளம் தோண்டப்பட்டு, தொட்டி கட்டும் பணி நடைபெற்றுவருகிறது.
இதற்குப் பல்வேறு அமைப்பினர், கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அங்குக் கூடிய பள்ளி மாணவர்கள், சூயஸ் திட்டத்தில் பள்ளி மைதானத்தில் நடந்துவரும் சூயஸ் தொட்டி பணிகளை நிறுத்த வேண்டும் எனக் கோரியும், மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சில மாணவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
ஆனால் ஆர்ப்பாட்டத்தைக் கைவிடாமல் முன்னெடுத்த 8 மாணவர்கள் மீது நோய்த்தொற்றுப் பரவல், கட்டுப்பாடுகளை மீறி கூடுதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்௧: சாலை விபத்தில் காயமடைந்தவரை காப்பாற்றிய அமைந்தகரை காவலர்கள்