பொள்ளாச்சி நகராட்சியின் 35ஆவது வார்டிலுள்ள ஜோதி நகரைச் சேர்ந்தவர் திமுக கிளைச் செயலாளர் ஞானவேல். இவர், ஓராண்டுக்கு முன்பு சிறு தொழில் தொடங்க வங்கி கடன் வாங்கி தரப்படும் என்று செய்தித்தாளில் விளம்பரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டு பொள்ளாச்சி அருகே உள்ள காளியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர், பாக்குமட்டை தட்டு தயாரிப்புக்கான இயந்திரத்தை வாங்குவதற்காக, வங்கிக் கடன் பெற்றுத்தர இவரை அணுகியுள்ளார். அப்போது ஞானவேல் முன்பணமாக 50 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார். ஆனால், மூன்று மாதங்களாகியும் அவர் இயந்திரம் வாங்கித் தராததால், ராமலிங்கம் பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். அடிக்கடி பணத்தைக் கேட்டு ராமலிங்கம் தொந்தரவு செய்ததால், கொஞ்சம் கொஞ்சமாக 45 ஆயிரம் வரை பணத்தை ஞானவேல் திருப்பி வழங்கியுள்ளார்.
இந்நிலையில், நேற்று ராமலிங்கம், அவரது அண்ணன் கனகராஜ் ஆகியோர் ஞானவேலை சந்தித்து மீதி பணத்தைக் கேட்டுள்ளனர். அப்போது ஞானவேல் பணத்தை தர முடியாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே, ஞானவேல் தனது நண்பர்களை அழைத்து ராமலிங்கத்தையும் கனகராஜையும் இரும்புக் கம்பி, கட்டைகளால் அடித்து தாக்கியுள்ளார். இதில், இருவருக்கும் கைகால்களில் முறிவு ஏற்பட் தலையிலும் அடிபட்டுள்ளது.
பின்னர், இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து ராமலிங்கத்தின் குடும்பத்தார் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், திமுக பிரமுகர் ஞானவேல் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாகியுள்ள ஆறு பேரையும் தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சிறுவர்களுக்கு மிட்டாய் கொடுத்து தன்பால் சேர்க்கையில் ஈடுபட்ட கடைக்காரர் கைது!