கரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கால் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்த மக்கள், தளர்வு அறிவிக்கப்பட்டதும் வேலைக்குச் சென்று வருகின்றனர். கடினமான காலம் என்றாலும், இதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு குடும்பம் நடத்த வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பாணையின்படி பேருந்துகள் இயங்க தளர்வுகள் அறிவித்து அனுமதியளிக்கப்பட்டது. எனினும் பேருந்துகளில் கட்டாயமாக தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டும், இருக்கைக்கு ஒருவர் மட்டும்தான் அமரவேண்டும் என்ற கட்டுப்பாடுகளையும் விதித்தது.
கடந்த ஒன்றாம் தேதி முதல் அரசு பேருந்துகள் 50 விழுக்காடு இயங்கிவந்த நிலையில், இன்று முதல் தனியார் பேருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ளன. தனியார் பேருந்துகளும் குறைந்த அளவே இயக்கப்படுவதால் மக்கள் கூட்ட நெரிசலில், சிக்கித் தவித்து பயணிக்க வேண்டிய சூழலுக்கு ஆளாகியுள்ளனர்.
பணிக்கு செல்லும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவது மட்டுமில்லால், ஒரு பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர். இதனால், தகுந்த இடைவெளி கேள்விக்குறியாகியுள்ளது. மேலும், கரோனா நோய்த்தொற்று சமூக பரவலாக மாற அதிக வாய்ப்புள்ளது என்ற அச்சம் எழுந்துள்ளது. பேருந்து ஓட்டுநர்களும் கூட்டத்தை கட்டுப்படுத்த தவறி, அதிக மக்களை ஏற்றிச் செல்கின்றனர்.
இந்நிலையில், கோயம்புத்தூர் அரசுப் போக்குவரத்து உழியர்கள் சங்கத்தினர் இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கோவை அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வேளாங்கண்ணிராஜ், "போதுமான பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அனைவரும் அதிகப்படியாக பேருந்தில் பயணம் செய்கின்றனர். இதனால் தகுந்த இடைவெளி என்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஒரு சில பயணிகள் முகக்கவசங்கள் அணியாமலும் பேருந்தில் பயணிக்கின்றனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் பேருந்துகளை இயக்குவதே மிகவும் கடினமான ஒன்று. பணிமனையில் உள்ள அலுவலர்கள் பேருந்தின் வசூல் குறைவாக உள்ளது. டீசல் அதிகம் செலவு செய்கிறீர்கள் என்று குற்றஞ்சாட்டி வருகிறார்கள். வருவாயை அதிகரிக்க கூடுதலான பயணிகளை ஏற்றி செல்லும்படி அலுவலர்கள் நிர்பந்திக்கின்றனர். இதனால், பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கும் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்படுகிறது.
எனவே, பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களின் பணிக்கு பாதுகாப்புத் தேவைகளை உறுதி செய்ய வேண்டும். கூடுதல் பேருந்துகளையும் இயக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: 'தொடர்பை துண்டித்ததால் கொன்றேன்'- பெண் கொலை வழக்கில் கைதானவர் வாக்குமூலம்!