தமிழ்நாடு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு, பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. கோவையைப் பொறுத்தவரை கோவை அரசினர் பொறியியல் கல்லூரிக்கு 10 கோடி ரூபாயும், மேம்பாலங்கள் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறுகையில், ”மத்திய பட்ஜெட்டை போலவே மாநில பட்ஜெட்டும் எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. ஆனாலும் புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு வட்டிக்கான மானியத் தொகை மூன்று சதவீதத்திலிருந்து ஐந்து சதவீதமாக உயர்த்தியுள்ளதை வரவேற்கிறோம். அதேபோல் புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு மானியத்தொகை 30 லட்சத்திலிருந்து 50 லட்சம் வரை உயர்த்தியுள்ளார்கள். அதையும் வரவேற்கிறோம். இருந்தாலும் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை போதுமானதாக இல்லை.
மேலும், தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோவையில் சிறு, குறு தொழில்கள் அதிகம். எனவே இங்கு தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்ற எங்களின் நீண்டகால கோரிக்கை இந்த பட்ஜெட்டிலும் அறிவிக்காதது ஏமாற்றமளிக்கிறது. தொழில் வளர்ச்சிக்காக மெட்ரோ திட்டப் பணிகள் குறித்து இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வரும் என எதிர்பார்த்த நிலையில் எந்த ஒரு அறிவிப்பும் வராததும் ஏமாற்றமளித்துள்ளது” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசு பணிக்கு என்று மணல் எடுத்து தனியாருக்கு விற்பனை -மணல் லாரி உரிமையாளர்கள் மனு!