ஆழியார், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்வதற்காக பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் தினசரி 100க்கும் மேற்ப்பட்ட வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில், புளியகண்டி பகுதியில் ஆறு மாதங்களுக்கு முன்பு சாலையை அகலப்படுத்தும் பணியும், மேம்பாலம் கட்டும் பணியும் தொடங்கப்பட்டன. ஆமை வேகத்தில் நடைபெற்று வந்த இந்த பாலப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதால், இந்தச் சாலை வழியாகப் பயணம் மேற்கொள்ளும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களுக்கும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பாலத்தை அகலப்படுத்தும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதாலும், பாலத்தில் கொட்டப்பட்டிருந்த மண் காற்றில் பறப்பதாலும் மிகவும் சிரமமாக உள்ளதாக தெரிவித்தனர். மேலும், இந்தப் பாலப்பணியை பொதுமக்களின் நலன் கருதி விரைந்து முடிக்கவும், அப்பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக நமது ஈடிவி பாரத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில், இதன் எதிரொலியாக, நிறுத்தப்பட்ட பாலப்பணிகள் மீண்டும் தொடங்கியதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு கூறுகையில், பொள்ளாச்சி - வால்பாறை செல்லும் சாலை புளியங்கண்டி பகுதியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நலன் கருதி பாலம் அகலப்படுத்தும் பணிகள் தற்பொழுது விரைவாக நடைபெறுவதாகவும், விரைவில் பணிகள் முழுமையடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காகப் பாலம் திறக்கப்படும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாதியில் நிறுத்தப்பட்ட பாலப்பணிகளால் அவதிக்குள்ளாகும் வாகன ஓட்டிகள்!