கார்ல் மார்க்ஸ் போன்ற மாபெரும் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு தொடங்கி காமிக்ஸ் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்றாற்போல புத்தகங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் அறிவாலயங்கள் என்றே புத்தகக் கடைகளைச் சொல்லலாம். ஒரு தலைமுறையின் அறிவுச்செறிவில் புத்தகங்களுக்கு முக்கியப் பங்குண்டு. அதனாலேயே அனைத்துப் பருவங்களிலும் புத்தகக் கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் படையெடுப்பர்.
புத்தகங்கள் புதிய உலகத்திற்கான வழிகாட்டி. புத்தக வாசகர்களின் பேச்சும், சிந்தனையும் தனித்துவமானவை. புத்தகக் கடைக்குள் நுழைந்தாலே தொழில்ரீதியான புத்தகங்கள், மனோதத்துவ புத்தகங்கள், புதினங்கள், சிறுகதைகள், கவிதைகள் எனப் புதிய புத்தகங்களின் வாசனை நம்மைக் கவர்ந்திழுக்கும்.
இந்நிலையில், உலகையே புரட்டிப்போட்ட கரோனா புத்தகக் கடையின் இயல்பையும் சேர்த்தே மாற்றியுள்ளது. காத்திருந்து பொறுமையாகத் தேடிப் பிடித்து புத்தகங்களை வாங்கிய காலம் மாறி, நீண்ட நேரம் கடைக்குள் இருந்தால் ஏதாவது ஆகிவிடுமோ என்ற அச்சத்தில் அவரவர் நினைக்கும் புத்தகங்களை மட்டும் வாங்கிக் கொண்டு செல்லும் நிலை வந்துவிட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த புத்தகக் கடை உரிமையாளர் ஒருவரிடம் கேட்டோம்.
”கரோனாவுக்கு முன்னர் விற்பனை நன்றாக இருந்தது. அதனையடுத்த இரண்டு மாதங்கள் போதிய விற்பனை இல்லை. மே மாதம் கடை திறந்த பின்னர் ஆன்லைனில் பதிவுசெய்து கொரியர் மூலம் புத்தகங்களை அனுப்பிவைக்கிறோம். தற்போது ஓரளவு வாடிக்கையாளர்கள் வருகின்றனர்”என்றார் புத்தகக் கடை உரிமையாளர் கார்த்திகேயன்.
கரோனா நெருக்கடி காலத்தில் பெரும்பாலானோர் அமேசான், நெட்பிலிக்ஸ் என வெப்சீரிஸ் பக்கம் ஒதுங்கினாலும், சில புதிய வாசகர்களும் உருவாகியுள்ளனர். கட்டற்ற இணைய வசதிக்கு நடுவிலும் சில வாசகர்கள் உருவாகியுள்ளது மகிழ்ச்சியளிப்பதாகப் புத்தகக் கடை உரிமையாளர் கார்த்திகேயன் தெரிவிக்கிறார்.
புதிய வாசகர்கள் உருவான போதிலும், பழைய வாடிக்கையாளர்களின் வரவு பெரும்பாலான புத்தகக் கடைகளில் குறைந்துள்ளது. கரோனா காரணமாக ஆன்லைனில் புத்தகங்கள் வாங்குவது அதிகரித்திருப்பதாகவே இதைப் பார்க்க முடிகிறது.
இது தொடர்பாக வாசகி கீதாவிடம் கேட்டோம். அவர், “முன்னர் கடைக்கு வந்தால் வெகு நேரம் செலவிட்டு புத்தகங்களை வாங்கிச் செல்வேன். ஆனால், கரோனா காலத்தில் அது சாத்தியப்படவில்லை. வாங்க நினைத்த புத்தகங்களை விரைவாகத் தேர்ந்தெடுத்து வாங்கிச் செல்கிறேன்”என்றார்.
இந்த நெருக்கடியான காலத்தில் குழந்தைகள் புத்தகங்களைப் படிக்க ஆர்வம் காட்டுவதாகவும் கீதா தெரிவித்தார். தற்போதைய காலத்தில் இந்திய வரலாறு, திருக்குறள், தன்னம்பிக்கை அளிக்கும் வாழ்க்கை வரலாறு போன்ற புத்தகங்கள் விற்பனையில் முன்னிலை வகிக்கின்றன.
பழைய வாசகர்கள் முன்முடிவுகளோடு கடைகளுக்கு வருவதால் நினைத்த புத்தகங்கள் கிடைக்கவில்லை எனில் விரைவாக கடைகளைவிட்டு வெளியேறிவிடுவதாகப் புத்தக் கடை ஊழியர் சிவப்பிரகாசம் தெரிவித்தார்.
ஆனால், இதே நேரத்தில்தான் வாசகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கவிஞர் வைரமுத்து, எழுத்தாளர் எஸ்ரா போன்ற வெகுஜன மக்களின் எழுத்தாளர்கள் தங்களுக்கு அதிக விமர்சனங்கள் வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மற்றொரு ஊழியர் விவேக்கிடம் கேட்டபோது, "கரோனா ஊரடங்கிற்கு முன்னதாக குழந்தைப்பருவ வாடிக்கையாளர்கள் அதிகம். இப்போது பெரும்பாலும் குழந்தைகள் ஆர்வம் காட்டும் புத்தகங்கள் விற்பனையில்லை. ஒரு வாடிக்கையாளர் ஏதேனும் எழுத்தாளருடைய புத்தகங்களை எங்களிடம் கேட்கும்பட்சத்தில் நாங்கள் அது குறித்து கூறிவிட்டு, அடுத்து வேறொரு எழுத்தாளரை அவருக்கு அறிமுகம் செய்வோம். ஆனால், இப்போது பரிந்துரைகளைக் கேட்க யாரும் தயாராக இல்லை” என்றார்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை புத்தகம் விற்றுத் தனது அன்றாட வாழ்க்கை நடத்த வேண்டிய சிறிய பதிப்பாளர்கள் அதிகம். சென்னை, கோவை, மதுரை தவிர மற்ற மாவட்டங்களில் பெரிய அளவில் புத்தகக் கடைகள் கிடையாது. அங்கிருக்கும் வாசகர்களுக்கு புத்தகக் காட்சிகள்தான் புத்தகங்களை வாங்கும் தளம். தவிர, இந்த விற்பனைதான் பெரும்பாலான பதிப்பாளர்களுக்கு வாழ்வாதாரம். புத்தகக் காட்சி நடைபெறும்போதுதான் அந்தந்த ஊர்களில் வசூலிக்க வேண்டிய தொகை அவர்களுக்கு கிடைக்கும். பழைய புத்தகங்கள் முறையாக விற்றால்தான் புதிய புத்தகங்களை அச்சிட முடியும்.
ஈரோடு, மதுரை ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் புத்தகக் காட்சி தலா 10 கோடிக்கு மேலாக வருமானம் ஈட்டித்தரும். கோவை, தருமபுரி, மேட்டுப்பாளையம், கரூர், ஓசூர் ஆகிய இடங்களின் புத்தகக் காட்சிகள் மூலம் 40 முதல் 50 கோடி வரை ஈட்ட முடியும் எனப் பதிப்பாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இவையெல்லாம் இந்த வருடம் சாத்தியப்படாமல் போனது.
புத்தகக் காட்சிகளை நம்பியிருந்த பதிப்பாளர்களுக்கு கரோனா காலம் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பிற நாடுகளில் புத்தகக் கடைகளுக்கு அந்தந்த நாடுகளின் அரசுகள் கொடுக்கும் முக்கியத்துவம், இந்தியாவில் இல்லாததே இந்த நிலைமைக்கு காரணம். புத்தகங்களையும் அத்தியாவசியத் தேவையாக நாம் கருதும்பட்சத்தில், இந்த நிலை மாறும்.
இதையும் படிங்க:பின்னடைவை சந்திக்கும் அச்சு தொழில் - மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் கிடைப்பதில் சிக்கல்..!