கோவை: போளுவாம்பட்டி வனச்சரகம் முள்ளங்காடு வனப்பகுதியில் வனப்பணியாளர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெரியாறு பகுதியில் வனப்பணியாளர்கள் சென்றபோது ஆற்றின் ஓரத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மரக் கிளைகளில் யானையின் மண்டையோடு மற்றும் எலும்புகள் சிக்கியிருந்ததை கண்டறிந்தனர்.
இதனையடுத்து கோவை மாவட்ட வன அலுவலர் அசோக் குமாருக்கு தகவல் தெரிவித்தன் பேரில் போளுவாம்பட்டி வனச்சரகர் சுசீந்திரன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் வனத்துறை மருத்துவர் சுகுமார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்ததில் ஆற்றின் நடுவே சிக்கியிருந்த யானையின் எலும்புக்கூடு பெண் யானையின் எழும்பு கூடு என்பதும் சுமார் 25 வயதுடைய யானை உயிரிழந்து சுமார் 90 நாட்கள் ஆகி இருக்கலாம் என்பதும் தெரியவந்தது.
மேலும் அவற்றை அப்புறப்படுத்திய வனத்துறையினர் ஆய்வக சோதனைக்காக யானையின் மாதிரிகளை சேகரித்தனர். கோவை மாவட்டத்தில் உள்ள ஏழு வனச்சரகங்களில் உள்ள வனப்பணியாளர்கள் இரவு முழுவதும் யானை விரட்டும் பணிக்கு சென்று விடுவதால் பகல் நேரத்தில் வனப்பகுதிக்குள் யாரும் ரோந்து செல்வதில்லை இதன் காரணமாக வனப்பகுதிக்குள் நடக்கும் இது போன்ற சம்பவங்கள் வெளியே தெரிவதில்லை என சூழலியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் - ஆளுநரால் வெடித்த சர்ச்சை