தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் மலை வாழ் சங்கங்கள் இணைந்து தமிழ்நாட்டிற்கு உரிய நிவாரண நிதியை ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்து, கறுப்புக் கொடி ஏற்றி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கறுப்புக் கொடி போராட்டம் குறித்து தமிழ்நாடு மலை வாழ் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் பரமசிவம் பேசியதாவது, 'தமிழ்நாடு அரசு கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூபாய் 13 ஆயிரம் கோடியை மத்திய அரசிடம் கேட்டிருந்தது. இதற்கு உரிய நிதியை மத்திய அரசு ஒதுக்காமல், கை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் என அறைகூவல் விடுத்து வருதாக' குற்றம் சாட்டினார்.
'மேலும் மக்களின் வயிற்றுப் பசியைப் போக்க, இந்த நடவடிக்கைகள் உதவாது என மத்திய அரசிற்கும், மாநில அரசிற்கும் தெரியப்படுத்தும் நோக்கில், தனி மனித இடைவெளியோடு, இப்போராட்டம்' நடைபெறுவதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 'ஆனைமலைப்பகுதி முழுவதுமுள்ள மலை வாழ் கிராமங்களில் இன்றைக்கு கறுப்புப்கொடிப் போராட்டம் சமூக இடைவெளியோடு நடைபெறுவதாக' தெரிவித்தார்.
சிறு, குறு விவசாயிகளுக்கு நீதிமன்ற வழிகாட்டுதல் படி, 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும், சேதமடைந்த விவசாயப் பொருட்களுக்கு உரிய இழப்பீட்டுத்தொகையை அரசு வழங்க வேண்டும் எனவும் பரமசிவம் தெரிவித்தார்.
மேலும் மலைவாழ் மக்களுக்கு 60% நலவாரிய அட்டைகள் புதுப்பித்தும், இல்லாதவர்களுக்குப் புதிதாக வழங்க வேண்டும் என்றும், அதுபோல அரசு நடவடிக்கை எடுத்து ஏற்கெனவே வழங்கிய ஆயிரம் ரூபாயோடு, மேலும் ஆயிரம் ரூபாய் வழங்கவும் கோரிக்கை விடுத்தார், பரமசிவம்.
இறுதியில், தமிழ்நாடு முழுவதும் வேலையில்லாமல் இருக்கும் ஏழை மக்களுக்கு கரோனா நிவாரண நிதியாக குடும்பத்திற்கு ரூபாய் 7,500யை உடனடியாக வழங்கி, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றார்.
குறிப்பாக சார்க்கார்பதி மற்றும் கல்லார் பகுதிகளில் ஏற்கெனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மற்றவர்களைக் காக்க தங்களின் உயிரை துச்சமென மதித்தவர்கள்...