கோவை: கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுக கூட்டணிக்கட்சிகளின் கூட்டம் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் மற்றும் அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர். திமுக, மதிமுக, சிபிஐ, சிபிஎம், கொமதேக உட்பட திமுகவின் கூட்டணிக்கட்சிகள் மற்றும் ஆதரவு அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்தக்கூட்டத்திற்குப்பின்பு கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், 'கார் வெடிப்புச்சம்பவத்தில் தமிழ்நாடு அரசு துரிதமான நடவடிக்கைகள் எடுத்துள்ளன.
கோவை காவல் துறையின் நடவடிக்கைகளை இந்தக்கூட்டம் வரவேற்கின்றது. NIA கட்டுப்பாட்டில் இருந்த நபர் இதை செய்து இருக்கின்றார் என்றால், இதை NIA தோல்வி எனச்சொல்வார்களா?. உளவுத்துறை செயல்படவில்லை என்ற கூற்றையும் இந்தக் கூட்டம் நிராகரிக்கிறது.
மேலும் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு NIA விசாரணைக்கு பரிந்துரை கொடுத்து இருப்பதை இந்தக்கூட்டம் வரவேற்கின்றது. பதற்றத்தை உருவாக்கும் நோக்கத்துடன் பந்த் அறிவித்துள்ள அரசியல் கட்சிகள் அதை (பா.ஜ.க ) மறுபரீசிலனை செய்ய வேண்டும்.
போராட்டத்தை திரும்பப்பெற்று அமைதியை நிலைநாட்ட வேண்டும் எனவும் இந்த கூட்டம் வலியுறுத்துகிறது. மத பதற்றத்தைத்தூண்டும் விதமான போராட்டம் கூடாது. அரசின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்' எனவும் வலியுறுத்தினார்.