கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பேரூராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இதில் 18 திமுக கவுன்சிலர்கள், காங்கிரஸ் கவுன்சிலர் ஒன்று, அதிமுக கவுன்சிலர் ஒன்று, சுயேச்சை ஒன்று என வெற்றி பெற்றுள்ளனர். இந்த நிலையில் இன்று திடீரென்று அவசரக் கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் B.R.M அவன்யூ என்ற மனைப்பிரிவில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் உள்ளது எனவும் அதற்கு பேரூராட்சி தலைவர் அனுமதி வழங்கியதாகவும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல் 10-வது வார்டு கவுன்சிலர் தாமரைச்செல்வி பூபதி எவ்வித அடிப்படை வசதியும் இல்லாத மனைப்பிரிவுக்கு அனுமதி வழங்கியதாக கூறி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதனால் பேரூராட்சியில் பரபரப்பு நிலவியது.
இது குறித்து பாஜக நிர்வாகி ரமேஷ் கூறும்போது, தனியாருக்கு சொந்தமான இடத்தில் கோட்டூர் பேரூராட்சி தலைவர் அனுமதியுடன் அனைத்து வசதிகளும் செய்து தருகின்றனர். இதை கண்டித்து இன்று பேரூராட்சி அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் இது குறித்து பொள்ளாச்சி சார் ஆட்சியர் இடத்தில் மனு அளிப்பதாக தெரிவித்தனர்.
பேரூராட்சித் தலைவர் ராமகிருஷ்ணன் கூறுகையில், பேரூராட்சிகளில் சிறப்பான முறையில் அனைத்து வசதிகளும் செய்து தருகிறோம் எனவும் பாரதிய ஜனதா கட்சியினர் வேண்டுமென்றே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: ராயபுரத்தின் பெருமைமிகு தருணம்: சென்னையின் முதல் ரயில் பயணத்தின் நீங்கா நினைவுகள்