கோவை - வரதராஜபுரத்திலுள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வரும் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் மேலும் அவரைத் தாக்கியதாகவும் கோவை மாவட்ட பட்டியலின நலவாரிய மாவட்டத் தலைவரும் பாஜக பிரமுகருமான ஜோதி (40) கைது செய்யப்பட்டார்.
கோவையைச் சேர்ந்த இவர், துப்புரவுத் தொழிலாளர்களிடம் பலமுறை இவ்வாறு நடந்து கொண்டதாகவும் தெரிகிறது. பொறுமையிழந்த தொழிலாளர்கள் ஜோதி மீது சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகார் மீது உடனடி நடவடிக்கை எடுத்த காவல் துறையினர் ஜோதியைக் கைதுசெய்தனர்.
அவர் மீது பாலியல் துன்புறுத்தல், தொழிலாளர்களைத் துன்புறுத்தல், ஊழியர்களைத் தாக்குதல், பொது இடங்களில் அவதூறாகப் பேசுதல் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கு முன்பே அந்த மருத்துவமனையில் உள்ள ஊழியர்களுக்கு சரியாக ஊதியம் வழங்குவது இல்லை போன்ற பல்வேறு பிரச்னைகள் நடந்து வரும் நிலையில், பாலியல் குற்றத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது, ஊழியர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை