கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் மருதமலை பகுதியில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் மாணவிகள் தங்கும் விடுதியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாள்களாக நள்ளிரவில் வெளிநபர்கள் விடுதி வளாகத்திற்குள் வந்து மாணவிகளின் ஆடைகளை எடுத்து அணிந்து கொண்டு, அறை கதவை தட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக கடந்த மார்ச் 31ஆம் தேதி பல்கலைக்கழக வாயிலின் முன் திரண்டு மாணவிகள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தை தொடர்ந்து பல்கலைகழக துணைவேந்தர் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், விடுதிகளின் வளாகத்தில் கூடுதலாக பாதுகாவலர்கள் நியமிக்கப்படுவர்.
கூடுதல் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணிகள் மேற்கொள்வர் என உறுதியளித்ததன் பேரில் மாணவிகள் போராட்டம் கைவிடப்பட்டது. இதனிடையே மாணவிகள் விடுதி வளாகத்திற்குள் வெளிநபர் சுற்றித் திரிவதாக வெளியிட்ட புகைப்படத்திற்கு பல்கலைக்கழக நிர்வாகம் மறுப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (ஏப்.9) நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர் விடுதி வளாகத்திற்குள் சுற்றித்திரியும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. விடுதி மாணவிகள் அந்த வீடியோவை பதிவு செய்ததுடன், இது தொடர்பாக வடவள்ளி காவல்துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அடையாளம் தெரியாத நபரைத் தேடியதோடு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே வெளியான புகைப்படத்துக்கு பாரதியார் பல்கலைக்கழக நிர்வாகம் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் தற்போது இந்த வீடியோ வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: போலி தமிழ்நாட்டு மதிப்பெண் சான்றிதழ்; அரசு பணியில் சேர்ந்த இருவர் கைது