கோயம்புத்தூர்: கருமத்தம்பட்டி நகராட்சி 27 வார்டுகளை கொண்டது. நகராட்சித் தலைவராக திமுகவைச் சார்ந்த நித்யா மனோகர் என்பவரும், துணைத் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யுவராஜ் என்பவரும் பதவி வகித்து வருகின்றனர்.
கருமத்தம்பட்டி நகராட்சி பகுதிகளில் சாக்கடைக் கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 27 வார்டுகளிலும் புதிதாக தார் சாலைகள் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கருமத்தம்பட்டியில் இருந்து எளச்சிபாளையம் வரை சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம், 60 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த சாலைகள் அமைக்க குறைந்த அளவு தார் அதிக அளவிலான கருப்பு நிற ஆயிலை கொண்டு சாலை அமைக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதனைத் தொடர்ந்து சாலை அமைக்கும் பணியை நேரில் பார்வையிட்ட நகராட்சி துணைத் தலைவர் யுவராஜ் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பிரபாகரன் ஆகியோர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். தார் சாலையில் உள்ள ஜல்லி, கற்கள் அனைத்தும் உதிர்ந்து வரும் வீடியோ காட்சிகளையும் பதிவிட்டுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், புதிய சாலை அமைக்கும்போது பழைய சாலையை அகற்றிவிட்டு சாலை அமைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஒப்பந்ததாரர்கள் பழைய சாலையை அகற்றாமலேயே புதிய சாலையை போடுகீறார்கள் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். புதிய சாலை அமைத்து சில நாட்களிலே சாலை பெயர்ந்து வருவதால் தங்களுக்கு சாலையே தேவை இல்லை என வேதனையுடன் கூறும் அப்பகுதி மக்கள் அரசு அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயிலில் பயணிகள் பாதுகாப்புக்கு ரூ.60 கோடியா! அப்படி என்ன விஷேசம்?