கோயம்புத்தூர்: உணவு, நீர் ஆகிய தேவைகளுக்காக மேட்டுப்பாளையம் பகுதியில் 'பாகுபலி' என்னும் ஆண் காட்டு யானை வெகுநாட்களாக சுற்றித்திரிகிறது.
யானையைப் பிடிக்கத் திட்டம்
இதனால் மக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம், அதனைப் பிடித்து ரேடியோ காலர் பொருத்த கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ஐ. அன்வர்தீன் உத்தரவிட்டார். அதன்பேரில் வனத்துறையினர், பாகுபலி யானையைப் பிடிக்கத் திட்டமிட்டனர்.
அதற்கு உதவியாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து மூன்று கும்கி யானைகள் மேட்டுப்பாளையம் வந்துள்ளன.
சிக்காத பாகுபலி யானை
பாகுபலி யானையின் நடமாட்டத்தைக் கண்டறிய 6 பேர் அடங்கிய வனத்துறையினர் 7 குழுக்களாகப் பிரிந்து வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அதன் நடமாட்டத்தைக் கண்டறியமுடியவில்லை.
அந்த யானை தற்போது, மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து சிறுமுகை வனப்பகுதிக்கு சென்றுவிட்டதாகத் தெரிகிறது. இதற்கிடையே, மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், உதவி வனப் பாதுகாவலர் தினேஷ்குமார், அரசு வன கால்நடை அலுவலர்கள் சுகுமார், அசோகம், ராஜேஷ் ஆகியோர் நேற்று (ஜூன்.26) மேட்டுப்பாளையம் அரசு மரக்கிடங்கு வளாகத்துக்கு வந்தனர்.
ரேடியோ காலர்
'பாகுபலி’ யானையின் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்துவதற்கு வசதியாக கலீம், மாரியப்பன், வெங்கடேஷ் ஆகிய மூன்று கும்கி யானைகளின் கழுத்துப் பகுதியின் சுற்றளவு அளந்து கண்டறியப்பட்டது.
பாகுபலி யானையின் நடமாட்டம் கண்டறியப்பட்டால் அதனை சமவெளிப் பகுதிக்கு கொண்டு வந்து, கும்கி யானைகள் உதவியுடன் வன கால்நடை மருத்துவக்குழுவினர் மயக்க ஊசி செலுத்துவர்.
வனத்துறையின் அடுத்தகட்ட நகர்வு
தொடர்ந்து, ரேடியோ காலர் பொருத்துவதற்கான பணிகள் அனைத்தும் தொடங்கப்படும் என்று தெரிகிறது.
இது குறித்து வன கால்நடை மருத்துவர் சுகுமார்,'பாகுபலி காட்டு யானைக்கு ரேடியோ காலர் பொருத்தும்பணி வெற்றிகரமாக முடிந்துவிட்டால், தமிழ்நாடு முழுவதும் வனப்பகுதியில் இருந்து வெளியேறி விவசாய விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் அனைத்து காட்டு யானைகளுக்கும் ரேடியோ காலர் பொருத்த வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்' என்றார்.
இதையும் படிங்க: 'காக்கா கறி சாப்பிடுற எங்களுக்கு கரோனா வராது...' தடுப்பூசி போட மறுத்த நரிக்குறவர் இன மக்கள்