கோவை: கணியூர் ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள நிலையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று மட்கும் குப்பை, மட்காத குப்பை எனத்தரம் பிரித்து வாங்கி, மறு சுழற்சி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கணியூர் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர்ப்பகுதியில் அப்பகுதி மக்கள் சாலை ஓரத்தில் பல ஆண்டுகளாக குப்பைக்கொட்டி வந்ததால், அந்தப்பகுதியில் தொற்று நோய்பரவும் அபாயம் உள்ளதாக ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து அந்த இடத்தை சுத்தம் செய்த ஊராட்சி நிர்வாகம் அங்கு நடிகர் வடிவேலு நடித்த ’வின்னர்’ படத்தின் புகைப்படத்தை வைத்து அதில் "இந்தப் இடத்திற்கு குப்பை கொட்ட நீயும் வரக்கூடாது; நானும் வரமாட்டேன்" என்ற வடிவேலு பேசிய வசனத்தை உல்டா செய்து விழிப்புணர்வு வாசகத்தை எழுதிப் போட்டுள்ளனர்.
இதன்காரணமாக தற்போது அந்தப்பகுதியில் மக்கள் யாரும் குப்பை கொட்டுவதில்லை எனவும், பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு வரக்கூடிய தூய்மைப் பணியாளர்களிடம் மட்கும் குப்பை, மட்காத குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குவதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார், கணியூர் ஊராட்சி மன்றத்தலைவர் வேலுச்சாமி.
ஊராட்சி மன்ற நிர்வாகம் வைத்துள்ள இந்த விழிப்புணர்வு வாசகம் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: எங்களை மீண்டும் கேரளாவுடன் இணைத்து விடுங்கள்; மீனவர்கள் வேதனை