கரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், மக்கள் பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. அரசும் மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் 1,000 ரூபாய் நிதி நிவாரணம் வழங்கி உள்ளது. அதுமட்டுமின்றி நிறுவனங்களில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், அன்றாடம் தினசரி சம்பள வேலைக்கு செல்லும் தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறியாக மாறியுள்ளது. அன்றாடம் வேலைக்கு செல்லக்கூடிய மாவட்ட ஓட்டுநர்களும் தங்களுக்கு அரசு நிதி நிவாரணம் அளித்து உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பேசிய கோவை மாவட்ட அனைத்து ஆட்டோக்கள் சங்கத்தின் தலைவர் சுகுமாறன், "கரோனா வைரஸ் தொற்றினால் மக்கள் யாரும் வீட்டிலிருந்து வெளியே வருவதில்லை. அவர்களுக்கு நிதி வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.அதேசமயம் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் ஆயிரம் ரூபாய் நிதி வழங்குவதாக அரசு அறிவித்தது. அதற்கு பட்டியல் தயார் செய்யும்படியும் கூறியிருந்தது. ஆட்டோ ஓட்டுநர்களின் பட்டியல் தயார் செய்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆட்டோ வாரியத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் அந்த உதவித் தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது வேதனை அளிக்கிறது. ஏனெனில் தற்பொழுது 20 விழுக்காடு ஆட்டோ ஓட்டுநர்கள் வாரியத்தில் உள்ளனர். ஆட்டோவிற்கு என்ற தனி வாரியம் இல்லை என்றாலும் போக்குவரத்திற்கான தனி வாரியத்தில் அனைவரும் உள்ளனர். அதில் எங்களின் பணமும் உள்ளது.
எனவே, இதிலிருந்து அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் தலா 5,000 ரூபாய் அரசு வழங்கினால் பெரும் உதவியாக இருக்கும். தற்போது வாழ்வாதாரம் இழந்து நிற்கும் அனைத்து போக்குவரத்து ஊழியர்கள் சார்பில் இந்த கோரிக்கையை முன்வைக்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க: ஒரே நேரத்தில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டதில் எவ்விதப் பாதிப்பில்லை- அமைச்சர் தங்கமணி!