கோயம்புத்தூர் கார் வெடிப்பு வழக்குத்தொடர்பாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட பெரோஷ், நிவாஸ் ஆகியோரின் தாயார் மைமுனாபேகம், தனது மகன்கள் குற்றவாளிகள் அல்ல என ஆதாரம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும், பெரோஷ், நிவாஸ் ஆகியோரின் நண்பன் முபின் தனது வீட்டை காலி செய்யப்போவதாகவும் பொருள்களை எடுக்க ஆள்கள் வேண்டும் எனக்கேட்டதாலே தனது மகன்களை அங்கு அனுப்பி வைத்ததாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பான ஆடியோ ஒன்றையும் அவர் தரப்பில் இருந்து வெளியிட்டுள்ளார். அதில், பெரோஷ் மற்றும் ரியாஸ் ஆகிய இருவர் இடையிலான செல்போன் உரையாடலும், ரியாஸ் மற்றும் அவரது தாயார் இடையிலான செல்போன் உரையாடலும் வெளியிட்டுள்ளார்.
பெரோஸ் தனது நண்பர் ரியாஸ் உடன் பேசும் ஆடியோவில், பெரோஷ், ரியாஸை தொடர்புகொண்டு முபின் வீடு காலி செய்வதாகவும்; பொருள்களை எடுக்க ஆள் வேண்டும் எனவும் கூறி ரியாஸை அழைக்கிறார். அதற்கு ரியாஸ் வர மறுக்கவே, 'ஒரு நிமிடம் வந்துட்டுப் போ’ என பெரோஸ் கூறுகிறார்.
மற்றொரு ஆடியோவில் ரியாஸின் தாயார் ஜூனைதா பேகம் அழைக்கும்போது, முபின் வீட்டில் வீடு காலி செய்துகொண்டு இருப்பதாகவும், விரைவில் வீட்டிற்கு வந்து விடுவதாகவும் தெரிவிக்கின்றார்.
இதன் மூலம், ஜமேசா முபின் வீட்டிற்கு பெரொஷ், நவாஸ், ரியாஸ் ஆகிய மூவரும் வீட்டை காலி செய்து கொடுக்கவே சென்றனர் என அவர்களது தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஜமேசாமுபின் வீட்டில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோதும் அவர்கள் பொருள்கள் உள்ள ஒரு மூட்டையை தூக்கிச்செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.
அக்காட்சிகளை அடிப்படையாக வைத்து, குற்றம் சாட்டப்பட்ட பெரொஷ், நவாஸ், ரியாஸ் ஆகிய மூவரும் முபின் வீட்டைக் காலி செய்வதற்கு உதவிக்காக சென்றபோது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக தாயார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக உக்கடம் பகுதியைச்சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய ஐந்து இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
தொடர்ந்து இறுதியாக அப்சர் கான் என்பவரை கைது செய்தனர். விறுவிறுப்பாக நடந்த வழக்கு விசாரணை, என்ஐஏ-க்கு மாற்றப்பட்டது. தற்போது என்ஐஏ அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களின் தாயார் வெளியிட்டுள்ள இந்த ஆடியோ ஆதாரத்தால், என்ஐஏ அதிகாரிகள், காவல் துறையினர் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவை கார் வெடிப்பு சம்பவம்; நெல்லையில் மீண்டும் போலீசார் விசாரணை