கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே உள்ள ஆத்து பொள்ளாச்சி ஊராட்சி, வால்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியாகும். காளியப்ப கவுண்டனூர், நெடும்பாறை, ஆத்து பொள்ளாச்சி மற்றும் மனக்கடவு ஆகிய பகுதிகளை உள்ளடக்கி சுமார் 3,500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த ஊராட்சியில் தலைவர் உள்பட 10 வார்டுகள் உள்ளது.
இங்கு கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஊராட்சி மன்றத் தேர்தலில் திமுகவைச் சேர்ந்தவர்கள் 4 பேரும், அதிமுகவைச் சேர்ந்தவர்கள் 3 பேரும், பாஜகவைச் சேர்ந்த ஒருவர் மற்றும் சுயேட்சை பட்டதாரி மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் என வெற்றி பெற்றனர். இதில் அதிமுகவைச் சேர்ந்த சகுந்தலா தண்டபாணி, ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேநேரம் துணைத் தலைவராக பட்டதாரி மாற்றுத்திறனாளி பெண் சரண்யா குமாரி என்பவர் மன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக துணைத் தலைவர் சரண்யா குமாரி, ஊராட்சி மன்ற கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணிப்பதாக புகார் எழுந்தது. இதன் தொடர்ச்சியாக ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆனைமலை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்ரமணியத்திடம், துணைத் தலைவர் சரண்யா குமாரி பதவி விலக வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக ஊராட்சி மன்ற உறுப்பினர்களால் குற்றம் சாட்டப்பட்ட துணைத் தலைவர் சரண்யா குமாரி, ஊராட்சி மன்ற கோப்புகளில் கையெழுத்து போடச் சொல்லி தன்னை வற்புறுத்துவதாக தெரிவித்தார்.
மேலும் தவறுகளைச் சுட்டிக் காட்டினால், தன்னை ராஜினாமா செய்யுமாறு மன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைவர் ஆகியோர் கூறுவதாக சரண்யா தெரிவித்தார். எனவே இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்ல உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோவை ஆட்சியரிடம் மண்டியிட்டு மனு அளித்த பொதுமக்கள்!