கோயம்புத்தூர்: வெள்ளலூர் பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு அதிகாலையில் அடுத்தடுத்து 4 பேரை தாக்கி கொன்றது ஒரு ஆண் காட்டு யானை. இதனையடுத்து அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர். ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் வரகளியாறு வனப்பகுதியில் விட்டனர். இதனையடுத்து அங்கிருந்து கீழே சென்ற அந்த யானை 2019ஆம் ஆண்டு பொள்ளாச்சி அடுத்த நவமலைப் பகுதியில் பேருந்திலிருந்து இறங்கிய பழங்குடியின குழந்தை மற்றும் ஒருவரை தாக்கிக் கொன்றது.
பின்னர் அந்தப் பகுதியில் தனியாக இருந்த வீடுகளில் புகுந்து அரிசியை மட்டும் சாப்பிட்டதால் அதற்கு 'அரிசி ராஜா' எனப் பெயர் வைத்தனர். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த விவசாயி ஒருவரை அந்த யானை தாக்கி கொன்றதால், அரிசி ராஜா யானையைப்பிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனையடுத்து 'அரிசி ராஜா' யானையைத் தொடர்ந்து கண்காணித்து 5 நாட்கள் போராட்டத்திற்குப் பின்பு ஆனைமலை அடுத்த அர்த்தநாரிபாளையத்தில் வாழை தோப்பில் வைத்து மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகள் கலீம், பாரி உதவியுடன் வனத்துறையினர் பிடித்து டாப்சிலிப் வரகளியாறு யானைகள் முகாமில் உள்ள கிரால் எனப்படும் மரக்கூண்டில் அடைத்தனர்.
2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிடிக்கப்பட்ட அரிசி ராஜா யானையை 9 மாதம் கிராலில் அடைத்து பயிற்சி அளித்தனர். பின்னர் அரிசி ராஜா என்ற பெயரை ‘முத்து’ என மாற்றிய வனத்துறையினர், கும்கி யானைக்குரிய பயிற்சிகளை அளித்துள்ளனர். இதனை ராஜ்குமார் என்ற பாகனும் ஜோதிராஜ் என்ற உதவி பாகனும் பராமரித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து அரிசி ராஜா என்கிற முத்து இரு மாதங்களுக்கு முன்னர் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி பகுதியில் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்த கருப்பன் என்ற யானையை பிடிக்க முதல் முறையாக களம் இறக்கப்பட்டது. முதல் ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்த நிலையில் அடுத்ததாக ஓசூர் வனப்பகுதியில் பிடிக்கப்பட்டு ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் பகுதிகள் விடபட்ட மக்னா யானை அங்கிருந்து வெளியேறி கோவை நகருக்குள் வந்த நிலையில் அந்த யானையை பிடிக்கும் பணியில் இரண்டாவது முறையாக களமிறங்கியது.
பின்னர் கோவை காரமடை வனப்பகுதியில் நாட்டு வெடியால் வாயில் காயம் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த பெண் யானையை சிகிச்சைக்கு கொண்டு செல்ல முத்து உதவியாக இருந்தது. இந்த நிலையில் கேரளா வனப்பகுதியில் பிடிக்கப்பட்டு தமிழக எல்லையில் விடப்பட்ட அரிக்கொம்பன் யானை கம்பம் நகருக்குள் சுற்றி வந்த நிலையில் அதனை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.
தொடர்ந்து இந்த ஆபரேஷனுக்கு உதவியாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து அரிசி ராஜா மற்றும் சுயம்பு, முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து உதயன் என்ற மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது. இதனையடுத்து அரிக்கொம்பன் யானையை தீவிரமாக கண்காணித்து வந்த வனத்துறையினர் அடங்கிய குழுவினர் திங்கட்கிழமை அதிகாலை அரிக்கொம்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர்.
இந்நிலையில் அதனை லாரியில் ஏற்ற அரிசி ராஜா முக்கிய பங்காற்றியது. மேலும் லாரியில் ஏற அடம் பிடித்த அரிக்கொம்பன் யானையை திறமையாக செயல்பட்டு லாரியில் ஏற வைத்தது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “அரிசி ராஜாவை கலீம் யானையை வைத்துப்பிடித்த நிலையில், தாளவாடி வனப்பகுதியில் பயிர்களை சேதம் செய்து வந்த கருப்பன் யானையை பிடிக்க முதல் முறையாக களம் இறக்கப்பட்டது, அதனை வெற்றிகரமாகவும் செய்து முடித்தது.
மிகவும் தைரியமான யானை, இதைப் பிடித்த போது கலீம் யானையையே தாக்கியது. 18 வயதில் பிடிக்கப்பட்ட இந்த அரிசி ராஜா யானைக்கு, இப்போது 23 வயது ஆகின்றது. ஆரம்பத்தில் மரக்கூண்டில் வைத்துப் பயிற்சி அளிப்பது என்பது மிகவும் சிரமமாக இருந்தது. இரண்டு முறை யானை பாகனை தாக்க முயன்ற நிலையில், நொடியில் பாகன் உயிர் தப்பினார்.
பின்னர் அதன் கோபத்தைத் தணிக்க மேற்கொண்ட முயற்சி அனைத்தும் பலன் அளித்ததால், விரைவில் அதன் அருகில் நெருங்க முடிந்தது. இதனை அடுத்து கட்டளைகளுக்கு அடி பணியும் அளவிற்குப் பயிற்சி வழங்கப்பட்டு தற்போது காட்டு யானைகளை பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. இரண்டு ஆபரேஷன்களை வெற்றிகரமாக முடித்த நிலையில் மிகவும் சவாலான ஆபரேஷன் என எதிர்பார்க்கப்பட்ட அரிசி கொம்பன் யானையை பிடிக்க முக்கிய பங்காற்றியது அரிசி ராஜா.
இதற்கு இன்னும் அதிகமான பயிற்சிகள் அளிக்கப்பட்டு சிறந்த கும்கியாக மாற்றப்படும் புகழ் பெற்ற கும்கி யானை கலீம் ஓய்வு பெற்ற நிலையில் அதற்கு அடுத்தபடியாக சின்னத்தம்பியும் அரிசி ராஜாவும் இருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: Arikomban: அரிக்கொம்பன் யானையை கேரளாவில் விடும்படி வழக்கு - கடுப்பான நீதிபதிகள்!