கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் ஒரு பெண்ணிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் கோவையிலுள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால், அப்பெண் வசித்துவந்த காந்தி நகர், மார்க்கெட் பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வால்பாறை நகராட்சியினர் அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மருத்துவத் துறையினர் அப்பகுதி மக்களை கண்காணித்து வருகின்றனர்.
மேலும், அப்பகுதியில் உள்ள 20 பேர்களிடமிருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. கரோனா தடுப்புப் பணியில் வால்பாறை நகராட்சி. வருவாய்த்துறையினர், மருத்துவத் துறையினர், காவல்துறையினர் ஆகியோர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இதன் ஒரு கட்டமாக இன்று வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரி விளையாட்டு மைதானத்திலிருந்து, பவர் பாராகிளைடர் மூலம் வானில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இதனை வால்பாறை வட்டாட்சியர் ராஜன் பார்வையிட்டார்.
இதையும் படிங்க: கிருமி நாசினி தெளிக்கும் பணியைத் தொடங்கி வைத்த அன்பில் மகேஷ்!