கோயம்புத்தூர்: கிராமப்புறங்களில் தெருவிளக்குகள் அமைப்பதற்கான ஒப்பந்தப்பணி வழங்குவதில் 500 கோடி முறைகேடு என்ற முதற்கட்ட தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனையில் இன்று காலை முதல் ஈடுபட்டுள்ளனர்.
கோவை சுகுணாபுரத்தில் உள்ள அவரது வீடு, தொண்டாமுத்தூர் மற்றும் வடவள்ளி உள்ளிட்ட ஐந்து இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இதனிடையே அங்கு ஏராளமான அதிமுக தொண்டர்கள் கூடத் தொடங்கினர். இதனால் போலீசாருக்கும் தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே இரண்டுமுறை நடைபெற்ற சோதனையில் எதுவும் கிடைக்காத நிலையில், மூன்றாவது முறையாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
அதேபோல் கோவை அதிமுக நிர்வாகி சந்திரசேகர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் சந்திரசேகரின் மனைவி ஷர்மிளா, கோவை மாநகராட்சியின் கவுன்சிலராக உள்ளார்.
மேலும் முன்னாள் அதிமுக அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான சி.விஜயாபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக இவர் அமைச்சராக இருந்தபோது, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே மஞ்சள்காரனை வேலன் நகரில் செயல்பட்டு வரும் வேல்ஸ் மருத்துவமனை 300 நோயாளிகள் உள்படுக்கைகள் கொண்டு செயல்பட்டு வந்ததாகவும், இந்த மருத்துவமனையில் புதிய மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கு தகுதியானது என தேசிய மருத்துவ குழுமத்திற்கு எதிராக முரணாக சான்றிதழ் வாங்கி இருப்பதாகவும், இது தொடர்பாக ஏற்கனவே நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதின் அடிப்படையில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சேலத்தில் மூன்று இடங்களிலும் மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருவள்ளூர், தாம்பரம் உள்பட மொத்தம் 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இதன் ஒரு பகுதியாக வேல்ஸ் குழுமத்தின் நிறுவனரான ஐசரி கணேஷின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகிய இருவருக்கும் சொந்தமான 25 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.